
காற்று, மழைக்கு பார்த்து பார்த்து பக்குவமாய் வளர்த்தால் வாழை மரங்கள்… வாழையடி வாழையாய் நம்மை வாழ வைக்கும் என்கிறார் மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி பாலா.
தலைமுறையாக வாழை விவசாயம் குறித்து தனது அனுபவங்களை கூறியதாவது: மதுரை சோழவந்தான் துவரிமானில் 10 ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். 6 ஏக்கரில் ஒட்டு நாடு வாழை ரகம், 2 ஏக்கரில் நெல் சாகுபடியாகிறது. 2 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது.
மறுதாம்பு செய்வதில்லை
வாழைத்தார் வெட்டிய பின் மறுதாம்பு முறையில் அதே இடத்தில் சிலர் வாழை சாகுபடியை தொடர்வர். இப்படி செய்வதால் ஒரே நேரத்தில் வாழைத்தார்கள் சீராக அறுவடைக்கு வராமல் முன்னும் பின்னுமாக வரும். தார் வெட்டிய வாழையைச் சுற்றி துாரில் 4 அல்லது 5 பக்க கன்றுகள் வளரும். அவற்றை வேர்க்கிழங்குடன் தோண்டி எடுப்போம்.
விதைநேர்த்திக்காக ரசாயன முறையில் கார்பன்டசிம், மேங்கோசெப் மருந்தை பயன்படுத்தலாம். ஏற்கனவே தரிசாக உள்ள வயலில் உழவு செய்து குப்பை உரம் இட்டபின் 6க்கு 6 அடி இடைவெளியில் இதை ஆவணி மாதத்தில் நடவு செய்வோம். ஏக்கருக்கு 1000 கன்றுகள் நடவு செய்யலாம்.
இலையும் லாபம் தான்
கன்று நடவு செய்த 3வது மாதம், 6வது, 8 வது மாதத்தில் தழை, மணி, சாம்பல் சத்துகள் இட வேண்டும். நோய்தாக்குதல் வரும் முன்பே இயற்கை பூஞ்சாணக் கொல்லியான டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனஸ் மருந்தை கரைத்து 2வது, 5வது, 7வது மாதத்தில் ஊற்ற வேண்டும். வாழை ஓராண்டு பயிர்.
7வது மாதத்தில் இலை அறுவடைக்கு வந்து விடும். 8வது மாதம் பூ விடும். அதிலிருந்து 3 மாதத்தில் வாழைத்தார் அறுவடைக்கு வந்து விடும். அதிலிருந்து அடுத்த 6 மாதத்திற்கு இலை அறுவடை செய்யலாம். தார் வெட்டிய மரத்தை தண்டு, நார் பயன்பாட்டுக்கு கொடுத்து விடுவோம்.
ஒரு ஏக்கருக்கு ஒரு வாரத்திற்கு 200 இலைகள் கொண்ட 8 கட்டுகளை அறுவடை செய்யலாம். ஒரு கட்டு விலை ஆவணி, வைகாசி சீசனில் ரூ.1000 வரை போகும். சில நேரங்களில் ஆடி, புரட்டாசியில் அறுவடை செலவுக்கு கூட காசு மிஞ்சாது. கை நஷ்டம் தான் ஏற்படும். பெண் பூக்கள் வாழைத்தாராக பிஞ்சாக மாறும். ஆண் பூக்களை வாழைப்பூ) விற்றுவிடுவோம்.
வாழையில் எல்லாமே காசு தான்
வாழையில் எல்லாமே காசு தான். சில நேரம் துாக்கி விடும். சில நேரம் அமுக்கி விடும். ஆவணி மாதத்தில் வாழை சாகுபடி செய்யும் போது சித்திரை மாதத்தில் பிஞ்சாக நிற்கும்.
சித்திரை, வைகாசியில் சுழி காற்றடிக்கும் போது உடைந்தால் அவ்வளவு தான். வருமானம் பார்க்கும் வரை உயிரை கையில் பிடிப்பது போல் தான். முட்டு கொடுத்து கம்பு ஒட்டினாலும் 40 சதவீதம் தான் பாதுகாப்பு.
இந்த முறை செலவு மிச்சம்
வாழைத்தார்களை வெட்டி கமிஷன் கடைக்கு கொடுத்து வந்தோம். முதன்முறையாக மதுரை வேளாண் வணிகத்துறை வழிகாட்டுதல் மூலம் அலங்காநல்லுாரில் உள்ள பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் இணைத்து விட்டனர். அருப்புக்கோட்டையில் இருந்து வியாபாரி நேரடியாக வந்து தோட்டத்தை பார்த்தார்.
வாழைத்தார் வெட்டுவதற்கு முன்கூட்டியே தார்களை எண்ணி 500 தார்களுக்கு ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்கினார். இதில் கமிஷன், வண்டி வாடகை, சுமை கூலி எதுவும் இல்லை.
வழக்கமாக மதுரை யானைக்கல் மண்டியில் கொடுப்போம். வெட்டுக்கூலி, சுமை கூலி, வண்டி வாடகைக்கு தலா ரூ.10 ஆயிரம் செலவாகும். தார் விலைக்கு ஏற்ப ரூ.100க்கு ரூ.10 கமிஷன் தரவேண்டும். மொத்தத்தில் ஒரு தாருக்கு ரூ.50 செலவாகும். இப்போது நேரடியாக வியாபாரியிடம் கொடுத்ததால் இந்த செலவு குறைந்து லாபமாக கையில் நிற்கிறது. 500 தாருக்கு ரூ.50 செலவு குறைந்தால் கூட ரூ.25 ஆயிரம் மிச்சமாகிறது. மதுரையில் முதன்முறையாக வாழையில் கூடுதல் லாபம் பார்த்த சந்தோஷம் கிடைத்தது என்றார்.
- எம்.எம். ஜெயலெட்சுமி மதுரை