PUBLISHED ON : செப் 10, 2014

தற்போதைய வறட்சியில், தென்னை மட்டுமல்ல, பல இடங்களில் பனை மரமும் காய்ந்துள்ளது. இருப்பினும், பனை மர வகையைச்சேர்ந்த பேரீட்சையை சாகுபடி செய்து, பாலைவன மரத்தை பணம் வரும் மரமாக மாற்றி சாதனை படைத்துள்ளார் 65 வயது விவசாயி எஸ்.டி.எம். முருகேசன்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே போழியம்மனூரைச்சேர்ந்த இவர், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் 400 க்கும் மேற்பட்ட பேரீச்சை மரங்களை பராமரித்து வருகிறார்.
சாதனை ரகசியம் குறித்து முருகேசன் கூறியதாவது:
ஒரு பேரீட்சை மரம் பழங்களை கொடுக்க, குறைந்தது மூன்றாண்டுகள் ஆகும். பர்ரி ரகம் மட்டுமே, முதல் முறையில் 27 மாதங்களில் பலன்தரும். அடுத்தடுத்து, ஆண்டுதோறும் பிப்ரவரியில் பூ மலர்ந்து, ஜூலையில் பலனளிக்க தயாராகிவிடும். ஒரு கன்றின் விலை 3 ஆயிரத்து 500 ரூபாய். சவுதியில் உள்ள உறவினர் மூலம் வாங்கி வந்து வளர்க்கத் துவங்கினோம். ஆண், பெண் மரங்கள் தனித்தனியே வளரும்.
பிப்ரவரியில் பூ மலரும்போது, ஆண் மரத்தின் மகரந்தங்களை சேகரித்து, பெண் மர பூக்களில் சேர்க்கும் பணியை, நாம்தான் மேற்கொள்ள வேண்டும். 20 முதல் 25 அடி இடைவெளியில் கன்றுகளை நட்டு, அதிக தண்ணீர் கொடுத்தோம். ஐந்து தென்னை மரங்களுக்குரிய தண்ணீரை, ஒரு மரத்திற்கு கொடுக்க வேண்டும். அடியுரம், குலை தள்ளிய 15 வது நாளில் குச்சி கட்டுதல் என, பராமரிப்பிற்காக தலா ஒரு மரத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் செலவானது.
பழுத்தபின், காய்கள் மஞ்சள் நிறமாகும். குலையின் ஒவ்வொரு குச்சியிலும் 20 க்கும் மேற்பட்ட காய்கள் இருந்தாலும், அடுத்தடுத்து பெருமளவு உதிரும். இருப்பினும், எஞ்சியவை பருத்து சதைப்பிடிப்பு அதிகரிக்கும். ஒரு குச்சிக்கு ஏழு கிலோ வரை, பேரீட்சை பழம் கிடைக்கும். மார்க்கெட்டிங் செய்வதிலும் பிரச்னை இல்லை.
தகவலறிந்த பலர், நேரடியாக வந்து வாங்கிச்செல்கின்றனர். தற்போது, கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிற ரகத்தை சேர்ந்த பேரீட்சைகள், பதப்படுத்தி, இனிப்புச்சுவை ஏற்றப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பர்ரி ரகத்தை, நேரடியாகச்சாப்பிடலாம்.
வைட்டமின்கள், தாதுக்கள், சத்துப்பொருட்கள் நிறைந்து, சீரான உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் , பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதில் முக்கிய பங்கு போன்றவை சிறப்பு அம்சங்கள்.
தென்னை சாகுபடியால் ஏமாற்றத்தில் உள்ள விவசாயிகளும், இந்த மாற்று முறையை பின்பற்றலாம், என்றார்.
இவருடன் பேச: 99655 40570.
தாமோதரன், கன்னிவாடி.

