PUBLISHED ON : செப் 03, 2014

தென்னையில் சராசரியாக மூன்று முதல் பத்து சதவீதம் வரை, ஒல்லிக்காய்கள் ஏற்படுகின்றன. சிறுத்தும், நீளமாகவும் உள்ளே பருப்பற்றும் கொட்டாங்குச்சி அல்லது உரிமட்டையுடன் காணப்படும். இதை வைப்பாளை, தேரைக்காய் என்கின்றனர்.
பாரம்பரிய குணம், ஊட்டச்சத்து பற்றாக்குறை, மகரந்தச் சேர்க்கை குறைபாடு ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. சரிவர பராமரிக்காத தோப்பு, மானாவாரி தோப்பிலும் ஒல்லிக்காய்கள் அதிகமாக இருக்கும்.
பாரம்பரிய ஒல்லிக்காய் ஏற்படுவதைத் தவிர்க்க, தரமான 15 முதல் 45 வயதுடைய தாய் மரமாக, 35 மட்டைகளுக்கு குறைவில்லாததும், ஆண்டுக்கு 100 காய்கள் கொடுக்கவல்லதும், பூச்சி நோய் தாக்குதல் இல்லாத மரங்களில் இருந்து, ஓராண்டு முதிர்ச்சி அடைந்த தென்னை நெற்றுக்களை தேர்வு செய்து, நாற்றுகளைத் தயார் செய்ய வேண்டும்.
நாற்றுகளின் வயது 9 முதல் 12 மாதம், அதிக வேர்களை உடைய கன்றுகள், கன்றுகளின் கழுத்துப்பகுதி 13 செ.மீ., தடிமன், ஐந்து முதல் ஏழு இலைகளுடன், பூச்சி, நோய் தாக்காதவையாக இருக்க வேண்டும்.
நன்கு வளர்ந்த மரம் ஆண்டுக்கு 540 கிராம் தழைச்சத்து, 260 கிராம் மணிச்சத்து, 820 கிராம் சாம்பல் சத்துக்களை, மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறது. இதனை ரசாயன மற்றும் இயற்கை உரங்கள் மூலம் ஈடுகட்ட வேண்டும்.
இவை தவிர சோடியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம், துத்தநாகம், இரும்பு, தாமிரம், போரான் ஊட்டச்சத்துகளும் தென்னை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை சரிசெய்வதற்கு தென்னைக்கான நுண்ணூட்டக் கல்வைகளை, தென்னைக்கு ஒருகிலோ என்ற அளவில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இடவேண்டும். இயற்கை எருவாக மட்கிய சாணம், கம்போஸ்ட், கோழி எரு, மட்கிய இலை மற்றும் தென்னை நார்க்கழிவுகளை இடலாம். பசுந்தாள் உரங்களான சணப்பு, கொளுஞ்சி, கலப்பகோனியம் போன்றவற்றை தென்னையின் ஊடே விதைத்து, பூக்கும் பருவத்தில் மடக்கி உழவேண்டும். இதனால் ஒல்லிக்காய்களின் எண்ணிக்கை குறையும்.
தேங்காயின் பருப்பு உற்பத்திக்கும், அதன் வளர்ச்சிக்கும் சாம்பல் சத்தும், போரான் சத்தும் தேவைப்படுகின்றன. சத்து பற்றாக்குறையால் காய்களில் வெடிப்பு ஏற்பட்டு, பருப்பு வளர்ச்சி தடைபடுகிறது. இதற்கு, மட்கிய சாண எரு அல்லது பசுந்தாள் உரம் 50 கிலோ, யூரியா 1.3கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ, கூடுதல் பொட்டாஷ் ஒரு கிலோ, போரானை வெண்காரம் 200 கிராம் ஆகியவற்றை, மூன்றாண்டு களுக்கு ஒருமுறை இடவேண்டும். இதன்மூலம் ஒல்லிக்காய்கள் உற்பத்தி குறையும்.
-கொ.பாலகிருஷ்ணன்,
விதை அறிவியல் மற்றும்
நுட்பவியல் துறைத் தலைவர், விவசாயக் கல்லூரி, மதுரை.

