பூண்டு அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள்: தமிழகத்தில் பூண்டு அதிகளவில் மலைப்பிரதேசங்களிலும் சிறிதளவு சமவெளிப் பிரதேசங் களிலும் சாகுபடி செய்யப் படுகின்றன. கொடைக்கானல், நீலகிரி மலைப் பகுதிகள் பூண்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 370 எக்டர் பரப்பளவில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுக்கு 2256 டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
அறுவடை முதிர்ச்சி: செடியின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சளாக மாறி பின் செடியின் மேல் இருக்கும் 5-6 இலைகள் பச்சையாகவே இருந்தால் அதுவே அறுவடை செய்வதற்கு ஏற்ற தருணமாகும். நடவு செய்த 120-130 நாட்களுக்குள் செடிகள் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
அறுவடை முறைகள்: அறுவடை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பே நீர்ப்பாசனத்தை நிறுத்திவிட வேண்டும். அறுவடை செய்யும்போது பூண்டு செடியை வேருடன் பிடுங்கி எடுத்து பின் உலர்த்தி பதப்படுத்த வேண்டும்.
பதப்படுத்துதல்: பூண்டின் வெளிப் புறத்தில் இருக்கும் ஈரப்பதத்தை குறைப்பதும் அதன் கழுத்துப்பகுதியை நன்றாக உலரவைப்பதும் அவசியமாகும்.
நிலத்தில் உலர்த்தி பதப்படுத்துதல்: பூண்டினை வேரோடு பிடுங்கியபின் அப்படியே நிலத்தில் வைத்து, தழைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும் வரை பதப்படுத்த வேண்டும்.
செயற்கை உலர்த்தி பதப்படுத்துதல்: மூடிய அறையில் பூண்டு கட்டுக்களை வைத்து 27 முதல் 35 டிகிரிசெல்சியஸ் வெப்பக்காற்றை செலுத்துவதன் மூலம் பூண்டு உலர வைக்கப் படுகின்றது. காற்றில் ஈரப்பதம் 65 முதல் 75 சதம் இருக்குமாயின் பதப்படுத்துதல் முடிவதற்கு 48 மணி நேரம் தேவைப்படுகிறது.
புகைமூட்டம் மூலம் உலரவைத்து பதப்படுத்துதல்: தமிழக மலைப் பகுதிகளில் (கொடைக்கானல் மற்றும் ஊட்டி) அறுவடைக்குப்பின் புகை மூட்டம் போடப்பட்டு பூண்டுகள் பதப்படுத்தப்படுகின்றன. இப்புகை விவசாயிகள் வீட்டில் சாதாரண முறையில் அடுப்புகளைக் கொண்டு போடப்படுகிறது.
தரம் பிரித்தல்: உலர்த்திப் பதப்படுத்திய பின்னர் முழுப்பூண்டு ஒவ்வொன்றையும் அதன் எடை அளவிற்கு ஏற்றவாறு இயந்திரம் மூலமாகவோ, வேலையாட்கள் மூலமாகவோ தரம் பிரிக்கப்படுகிறது. தடிமனான கழுத்துப்பகுதி, பிளவுற்ற பற்கள், காயம்பட்ட பகுதிகள், நோய், பூச்சி தாக்குதலுக்குட்பட்ட பற்கள், வெற்றிடப்பற்கள் ஆகியவை கழிக்கப் படுகின்றன. அவ்வாறு கழிக்கப்பட்ட பின் அளவுகோலுக்கு ஏற்றவாறு தரம் பிரிக்கப்படுகின்றது.
முதல் தரம் (எக்ஸ்ட்ரா கிளாஸ்) குறைந்தது 45 மி.மீ. விட்டம் மற்றும் அதற்கு மேல்.
இரண்டாம் தரம் - குறைந்தது 35-30 மி.மீட்டர் விட்டம் மற்றும் அதற்கு மேல்.
மூன்றாம் தரம் - குறைந்தது 30 மி.மீட்டர் விட்டம் மற்றும் அதற்கு மேல் என்ற வகையில் தரம் பிரிக்கப்படுகின்றன.
சிப்பம் கட்டுதல்: பெரும் பாலும் இந்தியாவில் (முக்கியமாக நாசிக் போன்ற நகரங்களில்) முழுப்பூண்டு வலைப் பையுடன் கூடிய சணல் பைகளில் அடைக்கப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. எனினும் பூண்டில் தரம் பிரித்தல், சிப்பம் கட்டுதல் போன்ற விதிகளுக்கேற்ப 18, 25 கிலோ எடைகொண்ட சொரசொரப்பான பிளை பெட்டிகளில் அடுக்கி வைத்து ஏற்றுமதி செய்வதே முறையாகும். நைலான் வலைப் பைகளில் அடைக்கும்போதுசேமிப்புக் காலங்களில் ஏற்படும் இழப்பு வெகுவாக குறைக்கப்படுகிறது. பூண்டு பற்கள் 4.4 செல்சியஸ் வெப்ப நிலையில் முளைத்துவிடுவதால் நீண்ட காலத்திற்கு இதை சேமித்து வைக்க இயலாது. 70 சத காற்றின் ஈரப் பதத்திற்கு மேல் பற்களை சேமித்து வைக்கும்பொழுது அழுகி விடுவதால் பூஞ்சாண்களின் பாதிப்பு அதிகரிக்கின்றது. எனவே 32-36 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் குளிர் பதனப்படுத்தலாம்.
சேமிப்புக்கிடங்கு: போதிய அளவிற்கு உலர்த்தி பதப்படுத்தப்பட்ட பூண்டுகள் காற்று தாராளமாக புகக்கூடிய சாதாரண அறைகளில் பாதுகாக்கப்படுகின்றன. முழுப்பூண்டு தழைகளுடன் கூடிய தண்டுப் பகுதியுடன் இருக்கும் பட்சத்தில் காற்றோட்டமுள்ள அறைகளில் தொங்கவிடப்படுகின்றன. 5 டிகிரி செ. முதல் 10 டிகிரி செ. வெப்பநிலை 60-70 சதவீத ஈரப்பதத்தில் 50 முதல் 80 நாட்களுக்கு தரமான பூண்டை சேமிக்கலாம். புறஊதா விளக்கு உள்ள கிடங்கில் 3 நிமிடங்களுக்கு பூண்டை வைத்திருந்தால் சேமிப்புக்காலம் 100 முதல் 150 நாட்கள் வரை நீடிக்கும்.
அறுடையின்போது பூண்டிற்கு காயம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அறுவடைக்குப்பின் பூண்டினை நன்கு உலர்த்தி பதப்படுத்தி வைப்பதன் மூலம் வெனிசிலியம் அஸ்பெர்ஜில்லஸ் அழுகல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். மைக்ரோ போபினா அழுகல் நோயைக் கட்டுப்படுத்த பூண்டினை பதப் படுத்தும்போது பார்மலின் 0.3 சதம் கொண்டு புகைமூட்டம் செய்வதால் அழுகுவதைத் தவிர்க்கலாம்.
புகையிலைஅந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த விதைப்பூண்டுகளை பாஸ்போமிடான் 1 மில்லிக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து கரைசலில் காயவைத்து பிறகு நன்கு காற்றோட்டமான அறையில் சேமித்து வைக்க வேண்டும். (தகவல்: முனைவர் ஜே.சுரேஷ், பா.செந்தமிழ்செல்வன், ரா.முத்துச்செல்வி, தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம். 04542-240 931.)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

