
செம்மறி ஆடு வளர்ப்பில் நோய் தடுப்பு பராமரிப்பு:
செம்மறி ஆட்டு இனங்கள் இறைச்சி உற்பத்திக்காகவும் கம்பளத்திற்காகவும் வளர்க்கப் படுகின்றன. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆட்டு இனங்கள் உள்ளன. தமிழகத்தில் 8 வகையான செம்மறி ஆட்டு இனங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை சிவப்பு, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, கடிக்கரைசல், வேம்பூர் போன்ற ரகங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கம்பள உற்பத்திக்காக கோயம்புத்தூர்குரும்பை, திருச்சி கருப்பு, நீலகிரி செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவை கம்பளத்திற்காக வளர்க்கப்பட்டாலும் இறைச்சியும் தருகின்றன.
ஆடுகளை மேய்க்கும்போது எல்லா ஆடுகளும் நன்கு மேய்கின்றதா என்று கண்காணிக்க வேண்டும். ஆரோக்கியமான ஆடுகள் மிகவும் ஆவலுடன் தீவனம் உட்கொள்ளும். மேய்ச்சல் தரையில் மேயாமல் நின்றால் அதை கவனிக்க வேண்டும். ஆடுகள் வயிறு நிரம்ப தின்றுவிட்டு மேயாமல் நிழலில் அசைபோட்டுக் கொண்டு நிற்கும். இத்தகைய ஆடுகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
நச்சுயிரி நோய்களான ஆட்டம்மை, கால்வாய்க் கோமாரிகளைத் தடுப்பூசி போட்டு நோய் வராமல் காத்துவிடலாம். நுண்ணுயிர் நோய்களான துள்ளுமாரி அடைப்பான், சப்பை நோய், தொண்டை அடைப்பான் போன்ற நோய்களை அந்தந்த நோய்களுக்கான தடுப்பூசி போட்டு நோய்களிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
அக ஒட்டுண்ணி நோய்களுக்கு முறையான குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். ஆண்டிற்கு 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குடற்புழு நீக்க மருந்துகளை மாற்றி கொடுக்க வேண்டும். புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்து கலந்த நீரில் ஆடுகளை முக்கி எடுத்து நீக்கலாம். அல்லது மருந்து கலந்த நீரை ஆட்டின்மீது தெளித்து நீக்கலாம்.
ஊட்டச்சத்து குறைவு நோய்களை வைட்டமின் நிறைந்த தாது உப்பைக் கொடுத்து பராமரித்து கட்டுப்படுத்தலாம். செம்மறி ஆடுவளர்ப்பு பற்றி விபரங்களுக்கு சேலம் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை பராமரிப்பு உதவி பேராசிரியை அவர்களை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (0427-242 2550) தொடர்பு கொள்ளலாம். (தகவல்: முனைவர் ப.சித்ரா, முனைவர் சே.மாணிக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர்-636 204. சேலம். 0427-242 2550)மீன் வளர்ப்பில் ஏக்கருக்கு இரண்டரை லட்சம் லாபம்:
அனுபவ விவசாயி கெண்டைமீன் வளர்ப்பில் சாதனையை செய்துள்ளார். பிரெடெரிக் நிக்சன் மீன்வளர்ப்பில் ஒரு முன்னோடி. திருச்சி மாவட்டத்தில் லால்குடி தாலுகாவில் உள்ள மேட்டுக்குடி என்னும் கிராமத்தில் மீன் உற்பத்தி குளங்களை 5 ஏக்கர் நீர்பரப்புடன் அமைத்துள்ளார். மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான 9 குளங்களை 25 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ளாளர். மீன்களை வளர்த்து உற்பத்தி செய்வதோடு மீன் குஞ்சுகளை வளர்த்து அவற்றைத் தேவையானவர் களுக்கு கொடுத்தும் உதவுகிறார்.
வளர்ச்சிக்கான வேக வளர்ச்சிக் கெண்டைகளான கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை மற்றும் சாதாக்கெண்டை ஆகிய ஆறு இனங்களும் வெள்ளிக்கெண்டை மீனைத்தவிர மற்ற ஐந்து வகை மீன்களையும் சேர்த்து ஒரே குளத்தில் இவர் கூட்டாக ஒரு எக்டர் பரப்பிளவுள்ள மீன்குளத்தில் வளர்த்தார்.
வளர்ப்புக் குளத்துக்கு 4 அடி ஆழம் நீர் பாய்ச்சி தேவையான இயற்கை மற்றும் ரசாயன உரங்கள் போட்டு மீன்களுக்கான இயற்கை உணவு 10-15 நாட்களுக்கு குளததில் உற்பத்தி செய்தார். பின்னர், விரலளவு நீளத்திற்கு மேல் வளர்ந்த 10,000 மீன் குஞ்சுகளை வளர்வதற்காக குளங்களில் இருப்பு செய்தார். மீன் குஞ்சுகளுக்கு சிறப்புறச் செய்த 'குரோபேஸ்ட்' என்னும் உணவைத் தினமும் தந்துவந்தார். சிறப்பான உணவாலும் மீன் குளத்துநீரின் தரப் பராமரிப்பாலும் மீன்களின் வளர்ச்சியும் அவற்றின் பிழைப்புத்திறனும் மெச்சும்படியாக அமைந்தன. இவற்றின் பயனால் நிக்சன் பெற்ற மொத்த மீன் உற்பத்தி ஆண்டொன்றுக்கு ஒரு எக்டருக்கு 11 டன்கள் (11,000 கிலோ) என நிகறற்றிருந்தது. இவர் வருடத்தில் இருமுறை ஒரே குளத்தில் மீன் வளர்த்தார். மொத்தம் 20,000 மீன் குஞ்சுகளை வளர்ப்புக்குப் பயன்படுத்தியுள்ளார். ஒரு எக்டர் நீர் பரப்பில் ஒரு வருடம் கெண்டை மீன்களை இருமுறை வளர்த்துப்பெற்ற 11 டன் மீன்களை கிலோவிற்கு ரூ.100/- என்று மட்டுமே கணக்கிட்டார். மொத்த வருமானம் ரூ.11 லட்சம். செலவு போக பெற்ற நிகர வருமானம் ரூ.4,78,000/- (தகவல்: முனைவர் வெ.சுந்தர்ராஜ், 90030 13634)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்