எஸ்.ஐ.ஆர்., பணியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் 1.08 கோடி பேர்!: கர்நாடகாவில் அக்., 27ல் இறுதி பட்டியல் வெளியீடு
எஸ்.ஐ.ஆர்., பணியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் 1.08 கோடி பேர்!: கர்நாடகாவில் அக்., 27ல் இறுதி பட்டியல் வெளியீடு
ADDED : ஆக 25, 2026 01:13 AM

பெங்களூரு; கர்நாடகாவில், எஸ்.ஐ.ஆர்., பணியின் எதிரொலியாக, 1.08 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரில் மட்டும் 46 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 27ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, கடந்த ஜூன் 30ம் தேதி துவங்கியது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் வீடு, வீடாக சென்று எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்கினர். படிவங்களை பூர்த்தி செய்தோரின் வீடுகளில் அடையாளத்திற்காக ஸ்டிக்கர் ஒட்டினர்.
ஜூலை 29ம் தேதி வரை எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. பின், ஆகஸ்ட் 8 வரை நீட்டிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு, படிவங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆகஸ்ட் 17 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது.
எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் ஆகஸ்ட் 17ம் தேதி வரை மக்களிடமிருந்து பெறப்பட்டன. நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
எஸ்.ஐ.ஆர்., பணிகளின் போது அடையாளம் கண்டறிய முடியாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், போலி வாக்காளர்கள் என பல வகைகளை சேர்ந்த 1 கோடிக்கு மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.
46 லட்சம் பேர் இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்புகுமார் வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு முன், 5 கோடியே 54 லட்சத்து 32,314 வாக்காளர்கள் இருந்தனர். இதில், அடையாளம் கண்டறிய முடியாதவர்கள் 15 லட்சத்து 17,042; நிரந்தரமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் 65 லட்சத்து 45,679; இறந்தவர்கள் 16 லட்சத்து 39,864; போலி வாக்காளர்கள் 7 லட்சத்து 9,870; பிறர் 3 லட்சத்து 83,884 என, மொத்தம் 1 கோாடியே 7 லட்சத்து 96,339 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். நீக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19.4 சதவீதம்.
இறுதியாக, 4 கோடியே 4 6 லட்சத்து 35,975 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ள னர். இதில், ஆண்கள் 2 கோடியே 21 லட்சத்து 59,240; பெண்கள் 2, கோடியே 24 லட்சத்து 73,864; பிறர் 2,871 பேர் அடங்குவர்.
இவர்களில் இளம் தலைமுறை வாக்காளர்கள் 3 லட்சத்து 70,341 பேர். அதுபோல, எஸ்.ஐ.ஆர்., படிவங்களில் குறைபாடுகள் மற்றும், 'மேப்பிங்' செய்யப்படாத 43 லட்சம் பேருக்கு நோ ட்டீஸ் வழங்கப்படும்.
பெங்களூரில் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முன் 1 கோடியே 3 லட்சத்து 88,363 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்.,க்கு பின், 56 லட்சத்து 99,660 வாக்காளர்கள் உள்ளனர். 46 லட்சத்து 88,703 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கலாம் .
பெயர் இடம்பெறாதவர்கள் இன்று முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவித்து விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 27ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
