'டெக் பார்க்' வளாகங்களில் பஸ் நிறுத்தம் போக்குவரத்து போலீசார் புதிய திட்டம்
'டெக் பார்க்' வளாகங்களில் பஸ் நிறுத்தம் போக்குவரத்து போலீசார் புதிய திட்டம்
ADDED : ஆக 25, 2026 01:12 AM

பெங்களூரு: பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 'டெக் பார்க்' போன்ற வளாகங்களில் பஸ் நிறுத்தம் அமைப்பது தொடர்பாக, மாநில அரசுக்கு போக்குவரத்து போலீஸ் துறை முன்மொழிந்துள்ளது.
பெங்களூரு நகரின் ஓ.ஆர்.ஆர்., எனும் வெளிவட்ட சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது. இதை தவிர்க்க போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், இதற்கு தீர்வு காண முடியவில்லை.
முன்மொழிவு இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக மாநில அரசுக்கு, முன்மொழிவு ஒன்றை போக்குவரத்து போலீஸ் துறை சமர்ப்பித்து உள்ளது.
இது குறித்து, போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டி கூறியதாவது:
ஓ.ஆர்.ஆர்., சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்கள் திடீரென பிரேக் பிடித்தால், பின்னால் வரும் வாகனங்களும் பிரேக் பிடித்தன. சில சமயங்களில் விபத்துகள் கூட ஏற்படுகின்றன.
பரபரப்பான நேரங்களில் பஸ்கள், பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டாலும், பல கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது தவிர, 'டெக்பார்க்' நுழைவு வாயில்கள் அருகில் குறுகிய சாலை உள்ளது. இங்கு பஸ்கள் நிறுத்தும் போது, மற்ற வாகனங்கள் வேகமாக செல்வதால், விபத்துகள் ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.
பொறுப்பு நகரின் பிரதான சாலைகளில் பஸ்களை நிறுத்துவதை தடுக்கும் பொறுப்பு, போக்குவரத்து போலீஸ் துறை, பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு போக்குவரத்து கழகம், 'டெக் பார்க்' மேலாண்மை வாரியங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
வெளிவட்ட சாலையில் உள்ள டெக் பார்க்குகள், தங்கள் நிறுவன வளாகங்களுக்குள், பி.எம்.டி.சி., பஸ்களை நிறுத்தவும், தனி பஸ் நிறுத்தங்களை அமைக்கவும் இடத்தை ஒதுக்க வேண்டும்.
பஸ் நிறுத்தத்தில் இருந்து அவரவர் அலுவலகங்களுக்கு பாதுகாப்பாக செல்லும் வகையில், நடைமேடைகள் அமைக்க வேண்டும். இதை பயணியர் அறிந்து கொள்ளும் வகையில், வழிகாட்டி பலகைகளும் நிறுவ வேண்டும்.
ஒப்பந்தம் செய்யும் டெக் பார்க் நிறுவனங்களின் வளாகங்களில் பஸ்களை இயக்கும் வகையில் வழித்தடம் மாற்றும் பொறுப்பை பி.எம்.டி.சி., ஏற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்பு இது குறித்து, டபிள்யூ.ஆர்.ஐ., இந்தியா பெலோ அமைப்பின் நிர்வாகி சீனிவாஸ் கூறியதாவது:
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சுட்டெரிக்கும் வெயில் மற்றும் கொட்டும் மழையில் சாலையோர பஸ் நிறுத்தங்களுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவே பஸ்கள், நிறுவனங்கள் அருகில் நிறுத்தப்பட்டால், ஊழியர்களுக்கு பயனளிக்கும். இதன் மூலம் பொது போக்குவரத்து, மெட்ரோ இணைப்பு பஸ்களை அதிகம் பயன்படுத்துவர்.
பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் நிறுவனம் அருகில் தனியார் நிறுவன பஸ்களை நிறுத்த அனுமதித்துள்ளனர். இதை பி.எம்.டி.சி.,க்கும் விரிவுபடுத்துவது நல்ல நடவடிக்கையாகும். பரபரப்பான நேரத்தில் நிறுவனத்திற்குள் பஸ்களை இயக்கவும், சாதாரண நேரத்தில் சாலைகளையும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வாகாது பி.பி.டி.வி., எனும் பெங்களூரு பஸ் பயணியர் மன்ற உறுப்பினர் ஷாஹீன் ஷாசா கூறுகையில், ''டெக் பார்க்கிற்குள் பஸ் நிறுத்தம், போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி தீர்வாக தோன்றலாம். ஆனால், இது போக்குவரத்து நெரிசலுக்கு முழுமையான தீர்வாகாது.
'' பெங்களூரு நகரின் அ னைத்து பகுதிகளிலும் பி.எம்.டி.சி., பஸ்கள் இயங்குகின்றன. டெக் பார்க்கிற்கு மட்டும் அதிகளவில் பஸ்களை ஒதுக்கினால், நகரின் மற்ற பகுதிகளில் பஸ் பற்றாக்குறை ஏற்படும். பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நகர் முழுதும் பொது போக்குவரத்தை வலுப்படுத்துவதே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகும்,'' என்றார்.
