/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆட்டோ கட்டணத்தை உயர்த்த சங்கங்கள் 'டிமாண்ட்'
/
ஆட்டோ கட்டணத்தை உயர்த்த சங்கங்கள் 'டிமாண்ட்'
ADDED : மார் 12, 2025 11:45 PM
பெங்களூரு: பெங்களூரில் கட்டணத்தை உயர்த்த, ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில், புதிய கட்டண அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் ஆட்டோவில் மீட்டர் போட்டு பயணம் செய்தால், முதல் இரண்டு கி.மீ.,க்கு 30 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கு 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஆட்டோக்களை இயக்க 'காஸ்' பயன்படுகிறது. ஒரு கிலோ காஸ் விலை 88 ரூபாயாக உள்ளது. இதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால், மீட்டர் கட்டணத்தை உயர்த்தும்படி பல்வேறு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர், போக்குவரத்துத் துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கிழக்கு போக்குவரத்து பிரிவு டி.சி.பி., குல்தீப்குமார் ஜெயின் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. பல்வேறு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
கட்டணத்தை உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தினர். முதல் 2 கி.மீ.,க்கு 40 ரூபாயும்; அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கு 20 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கும்படி பெரும்பாலோனார் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கலெக்டர், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதாக, டி.சி.பி., குல்தீப்குமார் ஜெயின் கூறினார். இன்னும் ஒரு வாரத்துக்குள் திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் அறிவிப்பு வெளியாகலாம் என்று, தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பஸ், மெட்ரோ ரயில் டிக்கெட் உயர்த்தப்பட்டதால், நகரவாசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களுக்கு மேலும் ஒரு 'ஷாக்' காத்திருக்கிறது.