/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பறவை காய்ச்சல் பீதி: அமைச்சர் அறிவுரை
/
பறவை காய்ச்சல் பீதி: அமைச்சர் அறிவுரை
ADDED : மார் 05, 2025 11:09 PM

பெங்களூரு: 'பறவைகளில் இருந்து, மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாது. எனவே மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை' என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவு:
மாநிலத்தின் ஆங்காங்கே பறவை காய்ச்சல் தென்படுகிறது. இது தொற்றுநோய் என்றாலும், பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுவது அபூர்வம். எனவே மக்கள் தேவையின்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடும்போது கவனமாக இருப்பது அவசியம்.
முட்டை மற்றும் கோழி இறைச்சியை, 70 டிகிரி வெப்பத்தில், அரைமணி நேரத்துக்கும் அதிகமாக வேக வைக்க வேண்டும். அதன்பின் சாப்பிட வேண்டும். நன்றாக வேகவைத்து சாப்பிட்டால், எந்த பிரச்னையும் ஏற்படாது.
தொற்று பரவிய கோழிப்பண்ணை, இறந்த பறவைகள் அல்லது கோழிகளின் அருகில் செல்வதை, தவிர்க்க வேண்டும்.
வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், கோழிப் பண்ணைகளுக்கு செல்வதற்கு, தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதில் உள்ள உபகரணங்களுக்கு, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கோழிப் பண்ணைகளில் கோழிகளை கண்காணிக்க வேண்டும். பண்ணைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
கோழிகளுக்கு நோய் பாதித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலோ, திடீரென கோழிகள் இறந்தாலோ, சுகாதார துறைக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டுமென, கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.