/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு முதல்வருடன் கைகோர்த்த பா.ஜ.,வினர்
/
மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு முதல்வருடன் கைகோர்த்த பா.ஜ.,வினர்
மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு முதல்வருடன் கைகோர்த்த பா.ஜ.,வினர்
மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு முதல்வருடன் கைகோர்த்த பா.ஜ.,வினர்
ADDED : பிப் 28, 2025 11:06 PM

பெங்களூரு: மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பில், முதல்வருடன் பா.ஜ.,வினர் கைகோர்த்தனர்.
''மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு குறித்து மீண்டும் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதுகிறேன்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் முதல்வரின் அலுவலக இல்லமாக காவேரியில், நேற்று மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், பெங்களூரு நகர மாவட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.சி.,க்கள் சந்தித்து, மனு கொடுத்தனர்.
மனு
அதில், 'இந்தாண்டு பட்ஜெட்டில், தங்களின் தொகுதி மேம்பாட்டு பணிக்காக, தலா 100 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.
ஏனெனில், மாநிலத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டுக்கான வருவாயின் பெரும்பகுதி, பெங்களூரு நகரில் இருந்து வருகிறது.
சாலைகள், பூங்காக்கள் உட்பட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மானியம் வழங்க வேண்டும். அத்துடன் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, ''மெட்ரோ ரயில் கட்டணம் தொடர்பாக, கட்டண நிர்ணய குழுவுக்கு இன்னொரு கடிதம் எழுதுங்கள்.
நாங்கள் மூன்று எம்.பி.,க்களும், கைகோர்த்து, மூன்று நாட்களில் கட்டண குறைப்பை செய்து முடிப்போம்,'' என்றார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''மெட்ரோ ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறும்படி ஏற்கனவே மெட்ரோ நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு சுமை ஏற்படுத்தாத வகையில் மெட்ரோ கட்டணம் குறைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து, விதிகளின் படி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்,'' என்றார்.
கண்ணீர்
பின், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறியதாவது:
நகர மேம்பாட்டுப் பணிகள் மந்தமாகிவிட்டன. முதல்வரை சந்தித்து, மேம்பாட்டுப் பணிகளுக்கு மானியம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
மாநிலத்தில் உள்ள அனைத்து பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியிலும் நிதி இல்லாமல், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்.
எங்கள் ஆட்சிக் காலத்தில் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை. மானியங்கள் வழங்குவதில், தற்போதைய அரசு பாகுபாடு காட்டுகிறது. மெட்ரோ ரயில் கட்டண உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்களே முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஒரு எதிர்க்கட்சியாக, நல்ல விஷயத்துக்கு அரசுக்கு துணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
1_DMR_0001
முதல்வர் சித்தராமையாவிடம் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில், கோரிக்கை மனு வழங்கிய, பெங்களூரு நகர மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.சி.,க்கள்.