/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகை ரன்யா ராவ் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு
/
நடிகை ரன்யா ராவ் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு
ADDED : மார் 09, 2025 12:22 AM

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில், வருவாய் புலனாய்வு பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில், சி.பி.ஐ., தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
கர்நாடக வீட்டுவசதி துறை கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ். இவரது மகள் ரன்யா ராவ், 33; நடிகை.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தியதாக, கடந்த 3ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
துபாய், அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து நகை கடத்தி வந்ததை, ரன்யா ராவும் ஒப்புக்கொண்டு உள்ளார். 'எங்கிருந்து தங்கம் கடத்தி வந்தேன் என்று உண்மையை கூறுகிறேன்.
'ஜாமின் கிடைத்த பின், நீங்கள் எப்போது சம்மன் அனுப்பினாலும், விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன்' என்றும், விசாரணை அதிகாரிகளிடம் ரன்யா ராவ் கூறி உள்ளார்.
இந்த வழக்கின் பின்னணியில் பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகள் தொடர்பு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால், ரன்யா ராவை வைத்து, வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர்களை பிடிக்க, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய் புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ரன்யா ராவ் தங்கம் கடத்தியது தொடர்பாக சி.பி.ஐ., நேற்று தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது.
இதனால், தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரன்யா ராவின் தந்தை ராமச்சந்திர ராவிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.