/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மண் பானைகளுக்கு மவுசு விற்பனை அமோகம்
/
மண் பானைகளுக்கு மவுசு விற்பனை அமோகம்
ADDED : மார் 04, 2025 05:02 AM

பெங்களூரு: வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வெயிலை சமாளிக்க முடியாமல், மக்கள் பரிதவிக்கின்றனர். 'ஏழைகளின் பிரிட்ஜ்' என, அழைக்கப்படும் மண் பானைகளுக்கு மவுசு அதிகரிக்கிறது.
கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, பிப்ரவரி இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. வரும் நாட்களில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள, பழ ரசங்கள், குளிர்பானம், லஸ்சி, மோர், இளநீர் அமோகமாக விற்பனையாகிறது.
பெங்களூரில் பல வீடுகளில் பானைகளில் தண்ணீர் நிரப்பி வைத்து அருந்துகின்றனர். மண் பானைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
மடிவாளா, யஷ்வந்த்பூர், கோரமங்களா, ஜெயநகர், சிவாஜி நகர், மல்லேஸ்வரம் என, பல்வேறு பகுதிகளில் மண் பானைகள் அமோகமாக விற்பனையாகின்றன. தள்ளுவண்டிகளில் வீதி வீதியாக விற்பதையும் காண முடிகிறது.
சிலர் பரண் மீது வைத்திருந்த பானைகளை கழுவி, சுத்தம் செய்து பயன்படுத்துகின்றனர். சிலர் புதிதாக பானைகள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
குழாய் வைத்த பானைகள், குழாய் இல்லாத பானைகள் என, வெவ்வேறு அளவுள்ள பானைகள் விற்கப்படுகின்றன. பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.
மண்பாண்டம் செய்யும் குயவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது.