/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திட்டமிட்டபடி தேர்வுகள் கல்வி துறை அமைச்சர் உறுதி
/
திட்டமிட்டபடி தேர்வுகள் கல்வி துறை அமைச்சர் உறுதி
ADDED : மார் 02, 2025 06:30 AM

பெங்களூரு: ''கர்நாடகா பந்த்தை காரணம் காட்டி, எந்த காரணத்தை கொண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படாது,'' என, மாநில கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
பெலகாவியில் சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக அரசு பஸ் நடத்துநரை மராத்தி மொழி பேசுவோர் தாக்கியதை கண்டித்து, இம்மாதம் 22ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நேற்று கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா அளித்தபேட்டி:
மார்ச் 22ம் தேதி முதல் 6, 7, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பந்த்தை காரணம் காண்பித்து, எந்த தேர்வையும் ஒத்திவைக்க முடியாது. குறிப்பிட்ட நாளில் தேர்வு நடந்தே தீரும்.
தேர்வு எழுத செல்ல மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், போராட்டக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டும். போராட உரிமை உண்டு. இருப்பினும், மாணவர்களுக்கு தேர்வும் முக்கியம். அவர்களின் எதிர்காலத்துக்கு எந்த தடையும் இருக்க கூடாது.
முதலாம் வகுப்பில், மாணவர்களை சேர்க்கும் வயது ஆறு என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி அதை தளர்த்த முடியாது. இது தொடர்பாக பலரும் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றமும், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது.
ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் குறைவாக இருக்கும் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தால், மற்றவர்களும் கேட்பர். நீதிமன்ற உத்தரவை கடைபிடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.