ADDED : மார் 05, 2025 11:12 PM

பெங்களூரு: சக பெண் அதிகாரி புகார் அளித்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த ரூபா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.,யாக இருந்தவர் ரூபா. இதே துறையில் டி.ஜ.ஜி.,யாக பணியாற்றியவர் வர்த்திகா கட்டியார். 'என் அனுமதி இல்லாமல் நான் பயன்படுத்தும் அறையை திறந்து, போலீஸ்காரர்கள் மஞ்சுநாத், மல்லிகார்ஜுன் ஆகியோர், பிற துறைகளின் கோப்புகளை வைத்து, படம் எடுத்தனர். ரூபா கூறியதன்படியே இப்படி செய்தனர்' என, தலைமை செயலர் ஷாலினியிடம், கடந்த மாதம் 20ம் தேதி வர்த்திகா கட்டியார் புகார் செய்தார். இந்த புகார் டி.ஜி.பி., அலோக் மோகனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி வர்த்திகா கட்டியார் இடமாற்றம் செய்யப்பட்டு, ஊர் காவல் படையின் கூடுதல் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டார்.
தன்னை விட உயர் அதிகாரியான ரூபா மீது புகார் செய்ததால், வர்த்திகா கட்டியார் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று போலீஸ் துறையில் பேச்சு அடிபட ஆரம்பித்தது.
இதைத் தொடர்ந்து, ரூபாவையும் அரசு நேற்று இடமாற்றம் செய்தது. கர்நாடக பட்டு சந்தைப்படுத்துதல் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.