ADDED : ஆக 22, 2026 11:24 PM
தட்சிண கன்னடா: ''ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவின் அரகெரே கிராமத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தே கவுடா தாயின் பிறந்த நாளை கொண்டாட வந்த கலைஞர்கள் தங்குவதற்கும், ஒப்பனை செய்வதற்கும் அறை பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளேன்,'' என, சுகாதார துறை அமைச்சர் காதர் தெரிவித்தார்.
மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தே கவுடாவும், அவரது குடும்பத்தினரும் அத்தொகுதியில் ஏழு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர். சாதாரண மக்களுக்கு பல சேவைகள் வழங்கி உள்ளனர். தொகுதி மக்களும் அவர்களை மதிக்கின்றனர்.
தனிப்பட்ட முறையில் அவர் மிகவும் கண்ணியமான, பொறுமையான அரசியல்வாதி.
ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவின் அரகெரே கிராமத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில், அவர் தாயின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டதாகவும், இதற்காக வந்த கலைஞர்கள், தங்குவதற்கும், ஒப்பனை செய்வதற்கும் மருத்துவமனையில் ஒரு அறை பயன்படுத்தியதாகவும் வீடியோவில் காணப்பட்டது.
வீடியோவில் காணப்படும் காட்சிகள் அனைத்தும் உண்மையல்ல. வீடியோவில் தெரிந்த இடம் மருத்துவனையில் காலியாக இருந்த இடமா அல்லது அருகிலுள்ள இடம் பயன்படுத்தப்பட்டதா என்பது அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு உள்ளேன். அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
