/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எந்த சூழ்நிலையிலும் மின் தடை ஏற்படாது!
/
எந்த சூழ்நிலையிலும் மின் தடை ஏற்படாது!
ADDED : மார் 01, 2025 05:14 AM

பெங்களூரு: ''கோடை காலத்தில் நாள்தோறும் 19,000 மெகாவாட் மின்சாரம் தேவையை பூர்த்தி செய்ய, மின் துறை தயாராக உள்ளது. எந்த சூழ்நிலையிலும் மாநிலத்தில் மின்தடை ஏற்படாது,'' என, மாநில மின் துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.
கோடை காலம் துவங்கி உள்ளதால், பெங்களூரில் மின் துறை அதிகாரிகளுடன், நேற்று அமைச்சர் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
கோடை காலத்தில் நாள்தோறும் 19,000 மெகாவாட் மின்சாரம் தேவையை பூர்த்தி செய்ய, மின் துறை தயாராக உள்ளது. எந்த சூழ்நிலையிலும் மாநிலத்தில் மின்தடை ஏற்படாது.
ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி, கோடை காலத்தில் விவசாய பம்ப் செட்களுக்கு ஏழு மணி நேரம் மின்சாரமும்; மற்ற பயன்பாட்டுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வினியோகிக்க, அனைத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தொழில்நுட்ப காரணங்களால் உள்ளூரில் மின் வினியோகம் தடைபடலாம்.
மாநிலத்தில், அதிகரித்து வரும் மின் தேவையை பார்க்கும்போது, மாநிலம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதை குறிக்கிறது. மின் தேவையை விட, அதிக மின் உற்பத்தி செய்தாலும், அதை சேமித்து வைக்க வழியில்லை.
எனவே, 'பேட்டரி சேமிப்பு திட்டத்தின்' கீழ், ஷராவதி பம்ப் சேமிப்பில் 2,000 மெகாவாட்; வராஹி பம்ப் சேமிப்பில் 1,600 மெகாவாட்; பாவகடா பம்ப் சேமிப்பில் 1,000 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாநிலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாது.
சில மின் துணை நிலையங்களில், மின்சார தேவை அதிகரித்து வருகிறது. இதை நிவர்த்தி செய்யும் வகையில், மின் சுமை குறைவாக உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து அதிக சுமை ஏற்படும் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் வினியோகிக்க 'தொடர்பு லைன்' ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் சில இடங்களில் முடிந்துவிட்டன.
மாநிலத்தில் போதுமான மின்சாரம் இருந்தும், அதன் பரிமாற்றம், வினியோகத்தில் தான் பிரச்னை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, துணை மின் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
நடப்பாண்டு 100 துணை மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின் பரிமாற்றம், வினியோகத்தில் உள்ள பெரும்பாலான சிக்கல்களை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சாரம் வினியோகிக்கும் வகையில், 'சூரத் ஜோதி யோஜனா' திட்டத்தை 'சிங்கிள் பேஸ்' மின்சாரம் வழங்க, மாநில அரசு செயல்படுத்தி உள்ளது.
பண்ணை வீடுகளில் வசிப்போர் வசதிக்காக, இரவில் 'சிங்கிள் பேஸ்' மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சில விவசாயிகள், இதை விவசாய பம்ப் செட்களுக்கு பயன்படுத்துவதால், அப்பகுதியில் மின்சார பிரச்னை ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கன்வென்டர்களை யாரும் பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.