காந்தி ஜெயந்தி விடுமுறைக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு பஸ்கள்
காந்தி ஜெயந்தி விடுமுறைக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு பஸ்கள்
ADDED : செப் 26, 2026 03:24 AM
பெங்களூரு: காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, பயணியரின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
இம்முறை காந்தி ஜெயந்தி, அக்டோபர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அதைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு என, தொடர் விடுமுறை வரவுள்ளன. இதை கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு செல்வர். இதனால் பயணியர் நெருக்கடி இருக்கும். இதை கருதி, சிறப்பு பஸ்கள் இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முன் வந்துள்ளது.
அக்டோபர் முதல் தேதி மற்றும் 2ம் தேதிகளில், பெங்களூரில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு, கூடுதல் பஸ்கள் இயக்கும். விடுமுறை முடிந்து, ஊர் திரும்பும் பயணியரின் வசதிக்காக, அக்டோபர் 4ம் தேதி, கர்நாடகாவின் வெவ்வேறு நகரங்கள், வெளி மாநிலங்களில் இருந்து, பெங்களூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
மெஜஸ்டிக் தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, சிருங்கேரி, ஹொரநாடு, கோகர்ணா, சிர்சி, கார்வார், ஷிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, தாவணகெரே, ஹூப்பள்ளி, தார்வாட் உள்ளிட்ட நம் மாநில நகரங்கள், அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களான திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத்துக்கு செல்லும் சிறப்பு பஸ்கள், பெங்களூரின் மெஜஸ்டிக் பஸ் நிலையங்களில் இருந்து புறப்படும் .
மைசூரு, ஹூன்சூர், பிரியாபட்டணா, விராஜ்பேட், குஷால்நகர், மடிகேரிக்கு பயணிக்கும் சிறப்பு பஸ்கள், மைசூரு சாலையின் சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
தமிழகம்
தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை, கும்பகோணம், திருச்சி; கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடுக்கு பயணிக்கும் சிறப்பு பஸ்கள், சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் www.ksrtc.karnataka.gov.in என்ற இணைய தளத்தில், டிக்கெட் முன் பதிவு செய்யலாம்.
பயணியர் பஸ் நிலையங்களுக்கு வருவதற்கு முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட் மீது குறிப்பிட்டுள்ள பஸ் நிலையம், பிக் அப் பாயின்ட் பெயரை கவனிக்க வேண்டும். பஸ்களின் முழுமையான அட்டவணையை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
