ஜூனியர் மாணவர்களுக்கு 'ராகிங்' ஒன்பது சீனியர்கள் மீது வழக்கு
ஜூனியர் மாணவர்களுக்கு 'ராகிங்' ஒன்பது சீனியர்கள் மீது வழக்கு
ADDED : செப் 26, 2026 03:26 AM
மங்களூரு: ஜூனியர் மாணவர்களை கடத்தி சென்று கொடூரமாக, 'ராகிங்' செய்த சீனியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் பாண்டேஷ்வராவில் சீனிவாஸ் விஸ்வ வித்யாலயா கல்லுாரி உள்ளது. இங்கு கேரளாவை சேர்ந்த அமீர் அலி, முதலாம் ஆண்டு பி.பி.ஏ., படிக்கிறார்.
இவர் செப்டம்பர் 19ம் தேதியன்று, தன் சக மாணவர் முகமது அல்பாஜுடன் சாலையில் நடந்து கொண்டிருந்தார்.
அப்போது பைக்குகளில் வந்த, சீனியர் மாணவர்கள் சிலர், ஜூனியர் மாணவர்களான அமீர் அலியையும், முகமது அல்பாஜையும் பலவந்தமாக கடத்தி சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த வீட்டில், இருவரையும் அடைத்து வைத்தனர். இரண்டு மாணவர்களின் உடைகளை கழற்றி, உள்ளாடையுடன் நிற்க வைத்து, பெல்ட்டால் கண்மூடித்தனமாக தாக்கினர். பலத்த அடிவாங்கி சோர்வடைந்த மாணவர்கள், குடிக்க தண்ணீர் கேட்டனர்.
ஆனால், சீனியர் மாணவர்கள் அசுத்தமான நீரை கொடுத்தனர். இதை குடிக்க மறுத்த ஜூனியர் மாணவர்கள் மீது, தண்ணீர் இருந்த பாத்திரத்தை வீசி எறிந்தனர். இவர்களை சித்ரவதை செய்து, மொபைல் போனில் 'வீடியோ' பதிவு செய்து கொண்டனர்.
அன்று மாலை, 6:00 மணி வரை, அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். இதை போலீசாரிடம் கூறினால், உங்களை கத்தியால் துண்டு, துண்டாக வெட்டுவோம் என, மிரட்டினர்.
அது மட்டுமின்றி, வகுப்புக்கு வரும் போது, நன்றாக ஷேவ் செய்து வர வேண்டும். ஷூ அணியக்கூடாது என, நிபந்தனை விதித்தனர்.
நடந்த சம்பவத்தால், அதிர்ச்சி அடைந்த மாணவர் அமீர் அலி, தன் பெற்றோரிடம் நடந்ததை கூறினார். அவர்களின் ஆலோசனைப்படி, பாண்டேஸ்வரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சீனியர் மாணவர்கள் நாசித் அமீர், ஆதில், அர்ஷக், அனீஷ், உதைஸ், மோகன் ரமேஷ், வி.பி. ஆதில், ரெஹான், ஷினாஸ் ஆகிய ஒன்பது பேர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையை துவக்கியுள்ளனர்.
