/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் குடிநீர் கட்டணம் உயருகிறது; மேல்சபையில் துணை முதல்வர் சிவகுமார் அறிவிப்பு
/
பெங்களூரில் குடிநீர் கட்டணம் உயருகிறது; மேல்சபையில் துணை முதல்வர் சிவகுமார் அறிவிப்பு
பெங்களூரில் குடிநீர் கட்டணம் உயருகிறது; மேல்சபையில் துணை முதல்வர் சிவகுமார் அறிவிப்பு
பெங்களூரில் குடிநீர் கட்டணம் உயருகிறது; மேல்சபையில் துணை முதல்வர் சிவகுமார் அறிவிப்பு
ADDED : மார் 14, 2025 11:31 PM

பெங்களூரு: ''பெங்களூரில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும். லிட்டருக்கு ஒரு பைசா கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, பெங்களூரு பொறுப்பு அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார், மேல்சபையில் அறிவித்தார்.
மேல்சபை பூஜ்ய நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் ராமோஜி ராவ் கேள்விக்கு பதிலளித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:
பெங்களூரில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு 10 பைசா கட்டணம் உயர்த்தும்படி, குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்தது.
திடீரென அதிகமாக உயர்த்தினால், மக்களுக்கு சுமை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, லிட்டருக்கு ஒரு பைசா உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
நஷ்டம்
பெங்களூரில் 2014 லிருந்து குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதன் விளைவாக குடிநீர் வாரியத்துக்கு, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அங்குள்ள ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் கஷ்டமாக உள்ளது.
ஊழியர்களின் ஊதியம், மின் கட்டண பில், அன்றாட பராமரிப்புப் பணிகள், குழாய்கள் பொருத்துவது உட்பட, மற்ற பணிகளுக்கு மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.
கட்டணம் உயர்த்த வேண்டும் என, குடிநீர் வாரியம் பல முறை அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஒரு பக்கம் குடிநீர் வாரியத்தை நிர்வகிக்க வேண்டும்; மற்றொரு பக்கம் மக்களின் நலனையும் காப்பாற்ற வேண்டும்.
இரண்டையும் கருத்தில் கொண்டு, குடிநீர் கட்டணம் உயர்த்துகிறோம். மக்களுக்கு ஓரளவு தொந்தரவு இருந்தாலும், ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
குடிநீர் வாரியம் ஆண்டுதோறும், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்துகிறது. மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பை பெஸ்காம் துண்டிக்கும்.
நாங்கள் சரியாக குடிநீர் வினியோகிக்காவிட்டால், மக்கள் எங்களை சபிப்பர்.
கடந்த ஆண்டு 7,000 ஆழ்துளைக்கிணறுகள் வறண்டன. நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். இது குறித்து, ஒரு மாதம் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர், குடிநீர் கட்டணமே செலுத்தவில்லை. இது குடிநீர் வாரியத்துக்கு, நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது. குடிநீர் கட்டணத்தை உயர்த்தினால், குடிநீர் வாரியம் ஆண்டுதோறும் அனுபவிக்கும் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தை தவிர்க்கலாம்.
குறைந்தபட்சம்
குடிநீர் வாரிய வேண்டுகோளின்படி, குடிநீர் கட்டண உயர்வு குறித்து, பெங்களூரு நகர எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்துவோம். தனியார் டேங்கர்களுக்கு குறைந்தபட்ச கட்டணம்நிர்ணயிப்போம்.
பல்வேறு இடங்களில், டேங்கர் நீரை வாகனம் கழுவுவது உட்பட, பல தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். நீரை வீணாக்கக் கூடாது.
இது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். தனியார் டேங்கர்களை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுப்போம்.
பெங்களூரு நகரில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், வறண்டுள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்ப முடிவு செய்துள்ளோம்.
வருங்கால மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, காவிரி ஆறாம் கட்ட குடிநீர் திட்டம் தயாரிக்கிறோம். இதை அமைச்சரவையில் சமர்ப்பித்து, பொது மக்களின் கருத்து கேட்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.