ADDED : ஆக 28, 2026 11:25 PM
பெங்களூரு: பெங்களூரில் ஒரு கிலோ வெங்காயம், 65 ரூபாய் வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கர்நாடகாவில் பல தாலுகாக்களில், தென் மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் சரியான விளைச்சல் இல்லை. காய்கறிகள் வரத்து மார்க்கெட்டுகளில் குறைந்து உள்ளது. இதனால், காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.
குறிப்பாக, வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெங்களூரில் சில்லரை விற்பனையில் கடந்த வாரம் ஒரு கிலோ 30 - 40 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம், கிலோவுக்கு 20 ரூபாய்க்கு மேல் உயர்ந்து உள்ளது.
சில்லரை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம், 65 ரூபாய் வரை விற்பனையாகிறது. விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வரவிருப்பதால், வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, பெங்களூரு வெங்காயம், உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்க செயலர் ரவிஷங்கர் கூறியதாவது:
சித்ரதுர்கா, கதக், ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா ஆகிய மாவட்டங்களிலிருந்து வழக்கமாக பெங்களூருக்கு வெங்காயம் வரும்.
இம்முறை மழையின்மையால் போதிய விளைச்சல் இல்லை. இதனால், இந்த மாவட்டங்களிலிருந்து வெங்காயத்தின் வரத்து கடுமையாக குறைந்து உள்ளது.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்திலிருந்து வெங்காயம் கர்நாடகாவிற்கு அதிகளவில் வருகிறது. போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்துள்ளதும், வெங்காய விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது.வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
