UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 10:14 PM

பெங்களூரு: உணவு தேடி திரிந்த யானைகளுடன் வந்த ஒரு வயது பெண் யானை குட்டி, செங்குத்தான மலை பகுதியில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தது.
தட்சிண கன்னடா மற்றும் குடகு மாவட்ட எல்லையில் தோடிகானாவின் ஹர்லட்கா வனப்பகுதி அருகில், சந்திரசேகர் கவுடா என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில், யானை குட்டி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சுள்ளியா வன அதிகாரி நிரஞ்சன் கூறியதாவது:
குடகு மாவட்டம், பாகமண்டலா வனப்பகுதியில் யானைகள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு ஹர்லட்கா வனப்பகுதிக்குள் நுழைந்திருக்கலாம்.
அந்த யானைகள் கூட்டம் உணவு தேடும்போது அல்லது பயணிக்கும் போது, ரப்பர் தோட்டம் அருகில் வந்திருக்கலாம்.
இந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பும்போது, செங்குத்தான மலையில் ஏறும் போது, ஒரு வயது பெண் யானை குட்டி வழுக்கி விழுந்திருக்கலாம். குட்டி யானை இறந்து கிடப்பது குறித்து தகவல் கிடைத்ததும், வனத்துறையினர் இங்கு வந்தனர்.
இவ்வாறு கூறினார்.
குட்டி யானையின் மரணத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய, சுள்ளியா கால்நடை மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நிதின் பிரபு சம்பவ இடத்துக்கு வந்து, பிரேத பரிசோதனை செய்தார்.
யானையின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை. மலையில் இருந்து கீழே விழுந்ததால் ஏற்பட்ட உள்காயத்தின் காரணமாகவே குட்டி யானை இறந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
