பெங்களூரில் 66 சதவீதம் பி.ஜி.,க்கள் அங்கீகாரம் பெறாதவை: ஆய்வில் அதிர்ச்சி
பெங்களூரில் 66 சதவீதம் பி.ஜி.,க்கள் அங்கீகாரம் பெறாதவை: ஆய்வில் அதிர்ச்சி
UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 10:14 PM
பெங்களூரு: பெங்களூரில் 5,480 பி.ஜி.,க்களில் 3,597 பி.ஜி.,க்கள் அங்கீகாரம் பெறாதவை என ஜி.பி.ஏ., நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூரில் விதிகளை மீறி பி.ஜி., எனும் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. இவைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விடுதி உரிமையாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, பெங்களூரில் இயங்கி வரும் தங்கும் விடுதிகள் குறித்து ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
இது தொடர்பாக ஜி.பி.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சுகாதார துறையும், மாநகராட்சி பொறியாளர்களும் நகரில் உள்ள பி.ஜி.,க்களை ஆய்வு செய்தனர். 2025ன் நகர்ப்புற வளர்ச்சி துறை சுற்றறிக்கையின்படி, 40 அடிக்கு குறைவான சாலை அகலம், கட்டட திட்ட மீறல்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பி.ஜி.,க்கள், அடித்தளத்தில் சமையல் அறைகளை கொண்ட பி.ஜி.,க்களுக்கு வர்த்தக உரிமங்கள் வழங்க முடியாது. இத்தகைய பி.ஜி.,க்கள் அங்கீகரிக்கப்படாத வகையின் கீழ் வருகின்றன.
இதன்படி, பெங்களூரில் 5,480 பி.ஜி.,க்களில், 3,597 பி.ஜி.,க்கள் அங்கீகாரம் பெறாதவையாக கருதப்படுகிறது. அனுமதி பெறாத பி.ஜி., உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. உடனடியாக வணிக உரிமத்துக்கு விண்ணப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
பி.ஜி.,க்களுக்கு ஜி.பி.ஏ.,யின் சுகாதார துறை உரிமம் வழங்குகிறது. அங்கீகாரம் இல்லாமல் நடத்துபவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளன. விதிகளை மீறி செயல்படும் பி.ஜி.,க்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூருக்கு வேலை வாய்ப்பு, படிப்பு, பிற தேவைகளுக்காக மாநிலத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நகருக்கு வந்துள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், விடுதியில் தங்கி உள்ளனர்.
தங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர்கள் பாதிக்கப்படுவர்.
மறுபுறம், தங்கும் விடுதி நடத்துவோர், வணிக நடவடிக்கையில் ஈடுபட்டாலும், வரிகள், மின்சார கட்டணங்களை, குடியிருப்பு பிரிவின் கீழ் செலுத்தி வருகின்றனர்.
இதனால் மாநகராட்சி , பெஸ்காமுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
