UPDATED : அக் 27, 2026 12:00 AM
ADDED : அக் 26, 2026 10:14 PM
தொட்டபல்லாபூர்: பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், பிசுவனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரவிகுமார், 40; விவசாயி. இவர் தன் ஆட்டை, கிராமத்தின் கோவில் அருகில் தினமும் மேய விடுவது வழக்கம். இதே பகுதியில் வசித்த சந்திரசேகர், 60, என்பவரின் 3 வயது பேத்திக்கு, ஆடு தொந்தரவு கொடுத்தது.
ஆ ட்டை கட்டி போடும்படி சந்திரசேகர் பல முறை கூறியும், ரவிகுமார் பொருட்படுத்தவில்லை. 2021 ஆகஸ்ட் 23ம் தேதி, சந்திரசேகரின் வீட்டு முன்பாக மேய்ந்த ஆடு, அவரது பேத்தியை முட்டி தள்ளியது.
இதை பார்த்த சந்திரசேகர் ஆட்டை கட்டிப்போட முற்பட்டார்.
அப்போது அங்கு வந்த ரவிகுமார், கோபமடைந்து, சந்திரசேகரின் மார்பில் கையால் ஓங்கி குத்தினார். இதில் மயங்கி விழுந்த அவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். ரவிகுமாரை தொட்டபல்லாபூர் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையை முடித்து, தொட்டபல்லாபூரின் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் ரவிகுமாரின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
