நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்ற ஜி.பி.ஏ., ஊழியர்களை தாக்கிய 10 பேர் கைது
நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்ற ஜி.பி.ஏ., ஊழியர்களை தாக்கிய 10 பேர் கைது
ADDED : ஜூலை 22, 2026 12:27 AM

சிவாஜிநகர்: பெங்களூரின் சிவாஜிநகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்ற, ஜி.பி.ஏ., ஊழியர்களை தாக்கியதுடன், 'பெப்பர் ஸ்பிரே' அடித்த, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் சார்பில், நகரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மும்முரமாக நடக்கிறது. நடைபாதை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பளார்...பளார் இந்நிலையில் நேற்று மதியம் 1:30 மணிக்கு சிவாஜிநகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையம் எதிரே, அடல் பிஹாரி வாஜ்பாய் கல்லுாரி அருகே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்தது.
உதவி செயற்பொறியாளர் மாதவ் ராவ் தலைமையில் நடந்த பணியில், சிவாஜிநகர் துணை மண்டல இன்ஜினியர் கவுதம், 29, ஹலசூரு துணை மண்டல உதவி செயற்பொறியாளர் சாவித்ரி, 40, சிவாஜிநகர் துணை மண்டல உதவி பொறியாளர் ருச்சிதா, 25, ஈடுபட்டிருந்தனர். ஜே.சி.பி., டிரைவர் சித்தப்பா, 30, ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டு இருந்தார்.
அங்கு வந்த ஒரு கும்பல், நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜி.பி.ஏ., ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென தாக்க துவங்கினர்.
ஜி.பி.ஏ., ஊழியர்கள் கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்ததுடன், தரையில் பிடித்து தள்ளி விட்டனர். 'பெப்பர் ஸ்பிரே' யை முகத்தில் அடித்தனர். கண் எரிச்சல் தாங்க முடியாமல் ஊழியர்கள் அலறினர்.
பணி புறக்கணிப்பு இது எல்லாம் நடந்த போது, சில போலீசார் அங்கு தான் நின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தாக்குதலுக்கு ஆளான ஜி.பி.ஏ., ஊழியர்கள், பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் சம்பவம் குறித்து மாதவ் ராவ் அளித்த புகாரில், கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும், ஜி.பி.ஏ., ஊழியர்கள் கொந்தளித்தனர். பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு இல்லை என்று கோஷம் எழுப்பியதுடன், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாவிட்டால், பணியை புறக்கணித்து போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்திற்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், பெங்களூரு சென்ட்ரல் டி.சி.பி., விக்ரம் ஆம்தே உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அங்கிருந்தவர்களிடம் விசாரித்து தகவல் பெற்றனர். மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆறுதல் கூறினர்.
தாக்குதல் தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்து, ஜி.பி.ஏ., ஊழியர்களை தாக்கிய கிரண், 34, பசவராஜ், 28, ரஞ்சித், 19, ரங்கசாமி, 49, முஹாகித் அகமது, 39, கோட்ரேஷ், 26, பரசுராம், 27, ரகு, 28, பார்த்திபன், 23, பரத், 24 ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கிடையில் சிவாஜிநகரில் நிறுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மீண்டும் துவங்கி நடந்தது. ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், சென்ட்ரல் மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் பணிகளை ஆய்வு செய்தனர்.
