ஆர்.எஸ்.எஸ்., பற்றி அவதுாறாக பேசிய பிரியங்க், முகமது நலபட்டுக்கு 'நோட்டீஸ்'
ஆர்.எஸ்.எஸ்., பற்றி அவதுாறாக பேசிய பிரியங்க், முகமது நலபட்டுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஜூலை 21, 2026 09:52 PM

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., பற்றி அவதுாறு கருத்து கூறிய, அமைச்சர் பிரியங்க் கார்கே, எம்.எல்.ஏ., ஹாரிஸ் மகன் முகமது நலபட் நேரில் விசாரணைக்கு ஆஜராக, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, கடந்த ஆண்டு, 'அரசு இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும்' என்று பதிவிட்டதுடன், 'உங்கள் வீட்டில் யாராவது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் வேலை செய்தால் அவர்களுடனான உறவை துண்டித்து கொள்ளுங்கள்' என்று பதிவிட்டு இருந்தார்.
இதுபோல, பெங்களூரு சாந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் மகன் முகமது நலபட், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் அணியும் அரை டவுசர் குறித்து ஆபாசமான கருத்து தெரிவித்து இருந்தார்.
இதனால் பிரியங்க் கார்கே, முகமது நலபட் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தேஜஸ் கவுடா புகார் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், பிரியங்க் கார்கே, முகமது நலபட் ஆகியோர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால், சதாசிவநகர், அசோக்நகர் போலீஸ் நிலையங்களில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.
இந்த விளக்கத்தை போலீஸ் தரப்பு அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை பரிசீலனை செய்த நீதிபதி சந்தீப் பாட்டீல், விளக்கம் சரியில்லை என்று கூறி ஏற்க மறுத்தார்.
பிரியங்க் கார்கே, முகமது நலபட் ஆகியோர், அடுத்த மாதம், 1ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மீண்டும் 'சம்மன்' அனுப்ப நேற்று உத்தரவிட்டார்.
