/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
1008 திருவிளக்கு பூஜையில் மெய் சிலிர்த்த பக்தர்கள்
/
1008 திருவிளக்கு பூஜையில் மெய் சிலிர்த்த பக்தர்கள்
1008 திருவிளக்கு பூஜையில் மெய் சிலிர்த்த பக்தர்கள்
1008 திருவிளக்கு பூஜையில் மெய் சிலிர்த்த பக்தர்கள்
ADDED : ஆக 09, 2025 04:54 AM
ஸ்ரீராமபுரம்: பெங்களூரு ஸ்ரீராமபுரம் பாஷ்யம் நகர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீராமபுரம் 'சுதா புக் சென்டர்' இணைந்து, வரலட்சுமி விரதம், ஆடி பவுர்ணமி, ஆடி நான்காவது வெள்ளி என, மூன்று நாட்களும் சேர்ந்த நன்னாளான நேற்று 1,008 திருவிளக்கு பூஜை நடத்தின.
டோக்கனுடன் வருகை 'டோக்கன்' பெற்றிருந்த பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த விழா பந்தலில் அமர்ந்தனர். குத்துவிளக்கு, தாம்பூலத்தட்டு, பஞ்சபாத்திரம், மணி எடுத்து வந்தனர். பூஜை செய்வதற்கான மஞ்சள், குங்குமம், வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் அரிசி உள்ளிட்ட தேவையான பூஜை பொருட்களை 'சுதா புக் சென்டர்' உரிமையாளர் எஸ்.எம்.பழனி வழங்கினார்.
திருவிளக்கு பூஜையில் 1,008 பேர் கலந்து கொண்டு, மனமாற துர்க்கை அம்மனை வேண்டினர். விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது.
'தினமலர்' வழங்கிய பரிசு பக்தைகள் அனைவருக்கும் 'தினமலர்' நாளிதழ், ஆன்மிக மலர் புத்தகம், கோலாப்பூர் மஹாலட்சுமியின் படம் ஆகியவை வழங்கப்பட்டன. இதை பார்த்த பக்தர்கள் முகத்தில் பொலிவு ஏற்பட்டது.
பஞ்சமுக விளக்கு கோவில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். தீபாராதனை காண்பித்தபோது, பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர். பஞ்சமுக விளக்குக்கு பூஜை செய்யப்பட்டது; கோவிலின் முன் வைக்கப்பட்டிருந்த துர்கா, லட்சுமி, சரஸ்வதி விக்ரஹங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன.
ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட பஞ்சமுக விளக்கு, விழா மேடையில் வைக்கப்பட்டது. பிரதான அர்ச்சகர் ஓம் பிரகாஷ் பட்டாச்சாரியார், லோகேஷ் ஷர்மா, ஹரிஹர சுதன் சிவம், ஹரிகோவிந்தன் ஆகியோர் பூஜை செய்தனர்.
கண்கொள்ளா காட்சி குத்துவிளக்கிற்கு, அம்பாளாக நினைத்து பக்தர்கள் ஒவ்வொருவரும் குங்கும அர்ச்சனை செய்தனர். இதில், திருமணம் ஆனோர், ஆகாதோர் என இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். தோஷங்கள் நீங்கிட, திருமண தடைகள் நீங்க, மாங்கல்ய பாக்யம் உள்பட பல வேண்டுதல்களை, வைத்து பக்தைகள் மனமுருகி வேண்டினர். விளக்குகளில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சம் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
லலிதா சகஸ்ரநாமத்தை அர்ச்சகர்கள் பாராயணம் செய்ய பக்தைகள் பின் தொடர்ந்து பூஜை செய்தனர். கோலாப்பூர் மஹாலட்சுமியின் படத்துக்கு பக்தர்கள் பூஜை செய்தனர். அனைவரும் ஒரே நேரத்தில் மணி அடித்தபோது, ஏற்பட்ட ஓசையில் தேவஸ்தானமே அதிர்ந்தது.
அழையா விருந்தாளி பூஜை நிறைவு நேரத்தில் சிவனின் வாகனமான நந்தி எனும் காளை பூஜை நடக்கும் இடத்திற்கே தன்னிச்சையாக வந்தது. நந்தி பகவானே நேரில் வந்து ஆசிர்வாதம் செய்ததாக அனைவரும் வியந்தனர். பக்தர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
தினமலருக்கு நன்றி பாஷ்யம் நகர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2022ல், முதன் முதலாக 1,008 விளக்கு பூஜை நடத்தினர். அப்போதும் பங்கேற்றேன்; இப்போதும் பங்கேற்றேன். இதை நினைக்கும் போதே, மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தினமலர் நாளிதழுக்கு கோடான கோடி நன்றி. சுப்பிரமணியரை வேண்டினால் அனைத்து பிரச்னைகளும்மாயமாய் மறைந்து விடும். பத்மா சேகர், பாஷ்யம் நகர்.
சிறப்பு கடந்த 40 ஆண்டுகளாக கோவிலுக்கு வருகிறேன். என் உயிருள்ள வரை முருகனை மறைக்க மாட்டேன். திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. 1,008 பேர் கலந்து கொண்டனர். தினமலருக்கு நெஞ்சார்ந்த நன்றி. மாலதி ராமலிங்கம், சாய் பாபா நகர்.
மகிழ்ச்சி திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்ததில், தினமலருக்கு வாழ்த்துகள். பல ஆண்டுகளாக தொடர்ந்து பூஜை செய்கிறேன். அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பூஜை செய்ததில் மகிழ்ச்சி. உஷா ராணி, பாஷ்யம் நகர், 4வது கிராஸ்.

