/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
28 மாதங்களில் 11,943 பைக்குகள் திருட்டு
/
28 மாதங்களில் 11,943 பைக்குகள் திருட்டு
ADDED : மே 07, 2025 11:09 PM

பெங்களூரு: பெங்களூரில் 28 மாதங்களில் 11,943 பைக்குகள் திருடப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டாலும், அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இதுதொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரில் 2023 ஜனவரி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 28 மாதங்களில் 12,347 வாகனங்கள் திருடப்பட்டு உள்ளன. இவற்றில் 11,943 பைக்குகள் அடங்கும்.
தினமும் சராசரியாக 12 முதல் 13 பைக்குகள் திருடப்படுகின்றன. இந்த திருட்டு வாகனங்களை பெண்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பது; கொள்ளை; கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.
வாகனங்களை திருடி அவற்றை பல பாகங்களாக பிரித்து இன்ஜின், சேசிஸ் எண்களை மாற்றி ஆன்லைனிலும் விற்பனை செய்கின்றனர். வாகன திருட்டில் கைது செய்பவர்களிடம் விசாரிக்கும்போது, ஆடம்பர, சொகுசு வாழ்க்கை வாழவும், காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கிக் கொடுக்கவும் திருடுவதாக கூறுகின்றனர். திருட்டில் 90 சதவீதம் குடியிருப்பு பகுதிகளில் தான் நடக்கின்றன.
பைக்குகள் திருட்டை தடுக்க உரிமையாளர்கள் பைக்கில் ஜி.பி.எஸ்., கருவி, எளிதில் உடைக்க முடியாத லாக்கர் பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்களில் உள்ள இடங்களில் பைக்குகளை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

