/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருட்டு வழக்குகளில் 12 பேர் கைது ரூ.3.30 கோடி நகை, பணம் மீட்பு
/
திருட்டு வழக்குகளில் 12 பேர் கைது ரூ.3.30 கோடி நகை, பணம் மீட்பு
திருட்டு வழக்குகளில் 12 பேர் கைது ரூ.3.30 கோடி நகை, பணம் மீட்பு
திருட்டு வழக்குகளில் 12 பேர் கைது ரூ.3.30 கோடி நகை, பணம் மீட்பு
ADDED : ஏப் 09, 2025 07:47 AM

பெங்களூரு : பெங்களூரில் திருட்டு வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 3.30 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் மீட்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று தன் அலுவலகத்தில் அளித்த பேட்டி:
பெங்களூரு பனசங்கரி 3வது ஸ்டேஜ் பாப்பையா கார்டனில் வசிப்பவர் சுகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
சமீபத்தில் ஒரு நிலத்தை விற்றுக் கொடுத்ததற்காக, அவருக்கு 2.47 கோடி ரூபாய் கிடைத்து இருந்தது. பணத்தை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் செல்ல, வாடகை கார் புக் செய்தார்.
தனக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்த உத்தரஹள்ளியின் மஞ்சுநாத், 43, என்பவரை, டிரைவராக அழைத்துச் சென்றார். சுப்பிரமணியபுரா பகுதியில் கார் சென்றபோது, பணத்தை காரில் வைத்துவிட்டு, ஏ.டி.எம்.,முக்கு பணம் எடுக்க சுகுமார் சென்றார். அப்போது 2.47 கோடி ரூபாய், காருடன் மஞ்சுநாத் தப்பிச் சென்றார். காரை இன்னொரு இடத்தில் நிறுத்திவிட்டு, தன் நண்பரான கிருஷ்ணகுமார், 38, என்பவருடன் தப்பினார். சுகுமார் அளித்த புகாரில், சுப்பிரமணியபுரா போலீசார் விசாரித்தனர்.
மாண்டியாவின் கே.எம்.தொட்டியில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2.20 கோடி ரூபாய் ரொக்கம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மீட்கப்பட்டது.
இதேபோல் மற்றொரு திருட்டு வழக்கில், ஒருவரை சுப்பிரமணியபுரா போலீசார் கைது செ ய்து 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மீட்டனர்.
தலகட்டபுரா போலீசார், வீடு புகுந்து திருடிய, ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 502 கிராம் தங்கம், வைர நகைகள்; நான்கரை கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை மீட்டனர்.
வேலை செய்த வீட்டில் திருடிய ஒருவரை, சுத்தகுன்டேபாளையா போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 128 கிராம் தங்கநகைகளை மீட்டனர்.
கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் திருடிய மூன்று பேர் கும்பல், எஸ்.ஜே.பார்க் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 கிராம் எடையுள்ள தங்கம், 124 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள், 6,000 ரூபாய் ரொக்கம்; மூன்று கார், ஆறு பைக் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 34.27 லட்சம் ரூபாய் ஆகும்.
ஒட்டுமொத்தமாக 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 3.30 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம், வெள்ளி, வாகனங்கள் மீட்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

