கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., பணி துவக்கம் முதல் நாளில் 12.48 லட்சம் படிவங்கள் விநியோகம்
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., பணி துவக்கம் முதல் நாளில் 12.48 லட்சம் படிவங்கள் விநியோகம்
ADDED : ஜூலை 01, 2026 08:19 AM

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., பணி நேற்று துவங்கியது. முதல் நாளில், 12.48 லட்சம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.
தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, கர்நாடகாவில் நேற்று துவங்கியது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் வீடு, வீடாக சென்று மக்களுக்கு, எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்கினர்.
கேள்விகளுக்கு பதில் வாக்காளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்து படிவங்களை நிரப்ப உதவி செய்தனர். படிவங்களை நிரப்பி வாங்கிய வீட்டில், 'ஸ்டிக்கர்' ஒட்டி சென்றனர். படிவங்களை உடனே நிரப்பி தர வேண்டும் என்று அவசரம் இல்லாததால், படிவங்களை பொறுமையாக நிரப்பி தரும்படியும் கொடுத்தும் சென்றனர்.
பெங்களூரு சென்ட்ரலில் 12,122; வடக்கில் 23,221; தெற்கில் 10,620; பெங்களூரு நகரில் 14,405; பெங்களூரு ரூரலில் 3,923 உட்பட மாநிலம் முழுதும் நேற்று ஒரே நாளில் 12 லட்சத்து 48 ஆயிரத்து 314 படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 47,817 பேர் ஆன்லைன் மூலம் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இறந்த வாக்காளர்கள் 291 பேர்; நிரந்தரமாக இடம் மாறியவர்கள் 116 பேர்; இரட்டை பதிவு 77 பேர் என்பதும் கண்டறியப்பட்டது.
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் முதல்வர் சிவகுமார், அவரது மனைவி உஷா ஆகியோர், எஸ்.ஐ.ஆர்., படிவங்களை நிரப்பி கொடுத்தனர். இதுபோல பத்மநாபநகர் வீட்டில் எதிர்க்கட்சி தலைவர் அசோக் படிவடித்தை நிரப்பி கொடுத்தார்.
கோலார் கடந்த பொதுத் தேர்தலின் போது கோலார் மாவட்ட வாக்காளர் பட்டியலில், சீனிவாசப்பூரில் 2,19,008; முல்பாகலில் 2,24,481; தங்கவயலில் 2,01,111; பங்கார்பேட்டையில் 2,12,627; கோலாரில் 2,42,046; மாலுாரில் 1,95,444 என மொத்தம் 12 லட்சத்து 94, 717 பேர் உள்ளனர்.
எஸ்.ஐ.ஆர்., பணிக்காக கோலார் மாவட்டத்தில் உள்ள 1,538 ஓட்டுச்சாவடிகளுக்கும் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் 9,500 பேரும், அதிகாரிகள் 3,500 பேரும் என மொத்தம் 13,000 பேர் எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தங்கவயல் தாலுகா எஸ்.ஐ.ஆர்., பொறுப்பு அதிகாரி மஞ்சுநாத் கூறியதாவது:
தங்கவயல் தாலுகாவில் நகர பகுதியில் 113, கிராம பகுதிகளில் 108 என, 221 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர்., பணியில், 1,328 ஊழியர்கள், 442 அதிகாரிகள் என, 1,770 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு வேளை வீடுகள் பூட்டி இருந்தாலோ, வீடு மாறியிருந்தாலோ அந்தந்த வீட்டு கதவுகளில் அரசு முத்திரை பதித்த அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டப் படும். எஸ்.ஐ.ஆர்., பணிகள் தொடர்பாக 'ஹெல்ப் லைன்' எனும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் எண்: 1950.
கோலார் மாவட்ட கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் கீதா - 95915 52686, தங்கவயல் தாலுகா பொறுப்பு அதிகாரி மஞ்சுநாத் -94497 72719 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
