பயங்கரவாதிகளுக்கு உதவியோரும் தேச துரோகிகளே: ஐகோர்ட்
பயங்கரவாதிகளுக்கு உதவியோரும் தேச துரோகிகளே: ஐகோர்ட்
ADDED : ஜூலை 01, 2026 08:20 AM

பெங்களூரு:'சட்ட விரோதமாக பாஸ்போர்ட் புதுப்பித்து, நாட்டுக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்க முடியாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து, தன் மீதான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய கோரிய டிராவல்ஸ் ஏஜன்ட் மனுவை தள்ளுபடி செய்தது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் ஹைதர் என்பவர், டிராவல்ஸ் ஏஜன்சி நடத்தினார். இவர் ஆந்திராவின் அதிபயங்கர பயங்கரவாதி இப்ராகிம் கலீல் உட்பட, 15 பேருக்கு சட்ட விரோதமாக பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொடுத்தார்.
அப்போது, 15 பேரின் விண்ணப்பங்களில், தன் சொந்த முகவரியை குறிப்பிட்டு, பொய்யான ஆவணங்களை உருவாக்கி, போலீசாரின் கண்களில் மண்ணை துாவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கிரிமினல் வழக்கு இது குறித்து, மங்களூரு வட கிழக்கு போலீஸ் நிலையத்தில், புகார் பதிவானது. போலீசாரும் ஹைதர் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஹைதர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தனது வாதத்தின் போது, 'பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொடுக்குமாறு கேட்டவர்கள் பயங்கரவாதிகள் என்பது மனுதாரருக்கு தெரியாது. பாஸ்போர்ட் மைய அதிகாரிகள், இதை கவனித்திருக்க வேண்டும். மனுதாரர் வயதானவர்; உடல்நலம் குன்றியவர். இதை கருதி, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
ஆனால், அரசு தரப்பு வக்கீல், 'தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் வழக்கை ரத்து செய்ய கூடாது' என்றார்.
வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 'நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டவர்களை, சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும். குடிமக்களோ, இடைத்தரகர்களோ அல்லது அரசு ஊழியர்களோ யாராக இருந்தாலும், நாட்டுக்கு துரோகம் செய்தால் மன்னிக்க முடியாது.
''உடல் ஆரோக்கியம், கருணையை காரணம் காட்டி, நாட்டின் பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தும் கடுமையான வழக்குகளின் விசாரணையை தடுக்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபடுவது மட்டுமின்றி, அவர்களுக்கு போலியான ஆவணங்களை உருவாக்கி தருவோரும் தேசத்துரோகிகள்தான். குற்றத்தில் ஈடுபட்ட கடைகோடி குற்றவாளி வரை, அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
ரத்து செய்ய மறுப்பு மனுதாரர் நிரபராதி என்றால், விசாரணையை எதிர்கொண்டு, குற்றமற்றவராக வெளியே வரட்டும். அவரது தனிப்பட்ட ஆரோக்கியத்தை காரணம் காட்டி, நாட்டின் நலனுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வழக்குகளை ரத்து செய்ய முடியாது,'' என கூறி, ஹைதரின் மனுவை தள்ளுபடி செய்தார்.
அதே நேரத்தில், போலீசாரின் குளறுபடியையும், நீதிபதி நாகபிரசன்னா கண்டித்தார். ''ஒரே முகவரியில் இருந்த, 15 வெவ்வேறு நபர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை, எந்த பரிசீலனையும் செய்யாமல், ஏற்றுக்கொண்ட போலீசாரின் செயல் ஆச்சரியம் அளிக்கிறது.
''இது, நிர்வாக குளறுபடி அல்ல. நாட்டின் பாதுகாப்புக்கு, அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் கடமை தவறியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஏட்டு மீதான விசாரணைக்கு, மாநில அரசு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.
