/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கவர்னரிடம் 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் புகார்!: 6 மாத சஸ்பெண்டை ரத்து செய்ய கோரிக்கை
/
கவர்னரிடம் 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் புகார்!: 6 மாத சஸ்பெண்டை ரத்து செய்ய கோரிக்கை
கவர்னரிடம் 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் புகார்!: 6 மாத சஸ்பெண்டை ரத்து செய்ய கோரிக்கை
கவர்னரிடம் 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் புகார்!: 6 மாத சஸ்பெண்டை ரத்து செய்ய கோரிக்கை
ADDED : ஏப் 29, 2025 06:18 AM

பெங்களூரு: சட்டசபையில், 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆறு மாதம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பா.ஜ., தலைவர்கள் மனு அளித்தனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சபாநாயகர் இருக்கை முன் போராட்டம் நடத்திய 18 எம்.எல்.ஏ.,க்கள் மீது விதிக்கப்பட்ட ஆறு மாதம் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி, மாநில அரசுக்கு உத்தரவிடும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், மாநில பா.ஜ., தலைவர்கள் புகார் கடிதம் வழங்கி உள்ளனர்.
நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, 'ஹனி டிராப்', முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பான விவாதத்தின் போது, சபாநாயகர் இருக்கை முன் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினர். பா.ஜ.,வினர் செயலுக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் காதர், 18 எம்.எல்.ஏ.,க்களை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
* புகார் மனு
இந்த உத்தரவை திரும்ப பெறும்படி பா.ஜ., தரப்பில் பலமுறை முறையிட்டும், சபாநாயகர் காதர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பெங்களூரு ராஜ்பவனில் நேற்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் உட்பட எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து புகார் மனு வழங்கினர்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா பேசிய 'ஹனி டிராப்' விஷயம் குறித்தும், முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்தும் பா.ஜ., உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி சபாநாயகர் இருக்கை முன்பும், அவர் அருகிலும் போராட்டம் நடத்தினர்.
இதை தவறாக புரிந்து கொண்ட சபாநாயகர், 18 எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்தார். கர்நாடகா சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.,க்கள் மீது அவர் விதித்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
மார்ச் 21ம் தேதி நடந்த நிகழ்வுகள், முன்கூட்டியே திட்டமிட்டவை அல்ல அல்லது சபாநாயகருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
அன்றைய தினம் சம்பந்தப்பட்ட சட்டசபை உறுப்பினர்களை அழைத்து, அவர்களின் விளக்கத்தை கேட்க சபாநாயகர் அழைத்திருந்தால், எங்கள் தரப்பு நியாயத்தை கூறி விளக்கியிருப்போம். துரதிர்ஷ்டவசமாக அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
* தலையீடு
பின், மாநில தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:
மார்ச் 21ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில், 18 பா.ஜ., - எம்.எல்.ஏ., க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அத்துடன், சட்டசபை மார்ஷல்கள் மூலம், வலுக்கட்டாயமாக துாக்கி செல்லப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த உத்தரவை திரும்ப பெறும்படி பலமுறை சபாநாயகரிடம் முறையிட்டும், அவர் ஏற்கவில்லை. சமீபத்தில் மங்களூரில் காதர் கூறும்போது, 18 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யும் முடிவை, நான் மட்டும் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.
இவ்விஷயத்தில் கவர்னர் தலையிட்டு, சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:
சம்பந்தப்பட்ட பா.ஜ., உறுப்பினர்கள், தங்கள் பொறுப்புகளை மீண்டும் ஏற்க அனுமதிக்கும் வகையில் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இதன் மூலம் சட்டசபை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளாக தங்கள் பொறுப்புகளை மீண்டும் ஏற்க முடியும். ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டை நிலை நிறுத்த, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் அவசர நிலையை காங்கிரஸ் பிரகடனப்படுத்தி, ஜனநாயகத்தை சீர்குலைக்க முயன்றது. சட்டசபையில் பங்கேற்பது எங்கள் உரிமை. இங்கு பேசவும், சட்டசபை குழுக்கள் மூலம் அரசின் செயல்பாட்டை கண்காணிக்கவும் எங்களை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். இது எங்கள் கடமை. அதற்கு இடையூறு ஏற்படுகிறது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது.
இது தொடர்பாக, கவர்னரிடம் முறையிட்டோம். அவரும், அரசுக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சர், சபாநாயகரிடம் பேசுவதாக தெரிவித்தார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு நடந்து முடிந்த கூட்டத்தொடருக்கு மட்டுமே இருக்கும். ஆறு மாதத்துக்கு இருக்காது என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
... புல் அவுட் ...
தங்கள் கருத்துகளை தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. விதிகள் படியும், நேரத்தின் படியும் அனைத்தும் நடக்கும்.
யு.டி.காதர்,
சபாநாயகர், சட்டசபை
***