பெங்களூரில் 2 நாட்கள் நடக்கும் நீச்சல் போட்டி நாளை துவக்கம்
பெங்களூரில் 2 நாட்கள் நடக்கும் நீச்சல் போட்டி நாளை துவக்கம்
ADDED : நவ 07, 2025 05:41 AM

பெங்களூரு: பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், நீச்சல் போட்டி நாளை துவங்குகிறது.
பெங்களூரு பத்மநாபநகரில் உத்தரஹள்ளி மெயின் ரோட்டில், நெட்டகல்லப்பா நீச்சல் மையம் உள்ளது. நகரின் தலைசிறந்த நீச்சல் மையமான இங்கு உள்ள நீச்சல் குளத்தில், ஆண்டிற்கு ஒரு முறை இங்கு நீச்சல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு இரண்டு நாட்கள் நீச்சல் போட்டிகள், நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது.
ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்ற ஸ்ரீஹரி நடராஜ், திநிதி தேசிங் பங்கேற்றனர். இவர்களை தவிர மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், கேலோ இந்தியாவில் ஜொலித்தவர்கள், ஆசிய நீர்வாழ் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களும் பங்கேற்கின்றனர்.
நாக் அவுட் சுற்றில் நடக்க உள்ள, ஸ்கின்ஸ் எனும் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஸ்விம்சூட் இல்லாமல் வீரர், வீராங்கனையர் வேகமாக நீச்சல் அடித்து இலக்கை எட்டும் போட்டியாக இது உள்ளது.
போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனையருக்கு வழங்க, 10 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பல பிரிவுகளில் வெற்றி பெறுவோருக்கு பிரித்து வழங்கப்படும். இம்முறை 'மிகவும் மதிப்புமிக்க நீச்சல் வீரர்' விருதும் சேர்க்கப்பட்டு உள்ளது.

