ADDED : ஏப் 10, 2025 05:04 AM

மைசூரு: கிராமத்திற்குள் புகுந்த புலியை பிடிக்க கும்கி யானைகளுடன் வனத்துறையினர் களமிறங்கியுள்ளனர்.
மைசூரு, ஹூன்சூர் தாலுகாவில் உள்ளது ஹைரிகே கிராமம். இந்த கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை புலி ஒன்று புகுந்தது. இந்த புலி, கிராமத்தை சுற்றி வருகிறது. இதை பார்த்த கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் புலியை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, வெடிகள் வெடித்து சத்தங்கள் எழுப்பி புலியை காட்டிற்குள் விரட்டினர்.
இதை பார்த்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களின் சந்தோஷம் நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் ஊருக்குள் புலி வந்துவிட்டது. புலி ஆக்ரோஷமாக உணவை தேடி அலைந்து வருவதாக கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
வனத்துறை அதிகாரி நந்தகுமார் தலைமையில் 25 பேர் கொண்ட வனத்துறையினர் புலியை பிடிக்க சென்றனர். ஆக்ரோஷமான புலியை பிடிக்க கும்கி யானைகளான பீமா, ஜூனியர் அபிமன்யு அழைத்து வரப்பட்டுள்ளன.
இரண்டு கும்கி யானைகளும் கிராமத்தில் தேடுதல் வேட்டையை துவங்கின. ஆனால், மறைந்திருக்கும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், கிராமத்தை விட்டு புலி வெளியே செல்லவில்லை எனவும், புலியின் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.