ADDED : செப் 30, 2026 03:48 AM

பெங்களூரு: நிலத்தை விற்க தடையாக இருந்ததால், 'சயனைடு' கொடுத்து பெண்ணை கொன்று, உடலை கால்வாயில் வீசிய வழக்கில், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
ஆந்திராவின் மந்திராலயத்தை சேர்ந்தவர் சீதா ஆச்சார், 47. விதவையான இவர், 2021ல் பெங்களூரு வந்து ராஜாஜிநகரில் உள்ள, சகோதரர் வெங்கடேஷ் ஆச்சார் வீட்டில் வசித்தார்.
மந்திராலயத்தில் சீதா பெயரில் இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது. மந்திராலயத்தை சேர்ந்த நில புரோக்கர் நுார் அகமது, சீதாவை தொடர்பு கொண்டு, அந்த நிலத்தை விற்கும்படி கேட்டார். இதற்கு அவர் மறுத்து விட்டார்.
அந்த பெண்ணை தீர்த்துக்கட்ட புரோக்கர் நினைத்தார். தனது கூட்டாளிகள் சத்யநாராயணா, மெண்டல் ரகு, பெஸ்தானா குமாருடன் சேர்ந்து திட்டம் போட்டார். கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி சீதாவிடம், மொபைல் போனில் பேசிய நுார் அகமது, ஹாசனில் குறைந்த விலைக்கு தங்கம் கிடைப்பதாக கூறினார்.
அவரது பேச்சை நம்பி, சீதாவும் காரில் சென்றார். காரில் செல்லும் போதே சயனைடு கலந்த, பழச்சாறை சீதாவிடம் கொடுத்தனர்.
அதை குடித்த அவர் இறந்தார். உடலை விஜயநகராவின் ஹொஸ்பேட்டிற்கு கொண்டு சென்றனர். உடல் மீது கல்லை கட்டி கால்வாயில் வீசினர்.
முன்னதாக, சீதா அணிந்திருந்த 30 கிராம் தங்க வளையல்களை பறித்தனர். அதை விற்று கிடைத்த பணத்தை செலவு செய்தனர்.
கிடைக்காத உடல் சீதா காணாமல் போனது குறித்து, சகோதரர் வெங்கடேஷ் அளித்த புகாரில், பெங்களூரு சுப்பிரமணியநகர் போலீசார் விசாரித்தனர். சீதாவை கொன்று உடலை கால்வாயில் வீசியது தெரிந்தது. நுார் அகமது, சத்யநாராயணா, மெண்டல் ரகு, பெஸ்தானா குமார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு, பெங்களூரு 60வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போதே மெண்டல் ரகு, பெஸ்தானா குமார் இறந்து விட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி மல்லிகார்ஜுன சாமி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
நுார் அகமது, சத்யநாராயணா மீதான கொலை குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிபதி, இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா, 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
