ADDED : செப் 30, 2026 03:48 AM
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நேற்று பெயின்ட் அடிக்கும் வேலையுடன், 1962 ஜூன் 9ல் முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா திறந்து வைத்த சிலையின் கல்வெட்டையும் பதித்தனர்.
ராபர்ட்சன் பேட்டை மையப் பகுதியில் மண்டபத்துடன் காந்தி சிலையை சுதந்திர போராட்ட வீரர்கள், ஜே.ஹெச்.பாப்னா, அருள்தாஸ், உட்பட சாணிடேரி போர்டு உறுப்பினர்கள் 1962ல் நிறுவினர்.
இதற்கான இரண்டு கல்வெட்டுகளை அப்போது சிலை பீடத்தில் பதித்திருந்தனர். இந்த சிலை உள்ள இடத்திற்கு காந்தி சதுக்கம் என்று பெயரிடப்பட்டது.
காந்தி சதுக்கத்தை விரிவு படுத்த 2017ல் நகராட்சி நிர்வாகம் மண்டபத்தையும், சிலையையும் அகற்றினர். அதில் இருந்த கல்வெட்டு களையும் அகற்றினர். காந்தி சிலையை 2018ல் நிறுவினர். ஆனால் அப்போது அந்த கல்வெட்டுகளை நிறுவவில்லை.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் நேற்று சிலைக்கு பெயின்ட் அடிக்கும் வேலையுடன் பீடத்தில் அந்த கல்வெட்டையும் பதித்தனர். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சிலையின் கல்வெட்டு பதிக்கப்பட்டது.
