காணாமல் போன 2 மாணவியர்: 4 மாதமாக திணறும் போலீசார்
காணாமல் போன 2 மாணவியர்: 4 மாதமாக திணறும் போலீசார்
ADDED : ஏப் 16, 2026 03:59 AM
வித்யாரண்யபுரா: பெங்களூரின் வித்யாரண்யபுராவில் வசித்தவர் தனிஷ்கா, 18, இரண்டாம் ஆண்டு பி.யு.சி., படிக்கிறார்.
இவரது தோழியான தேஜஸ்வினி, 17, முதலாம் ஆண்டு பி.யு.சி., படிக்கிறார். இவ்விரு மாணவியரும் ஜனவரி 31ம் தேதியன்று, வீட்டை விட்டு சென்றவர்கள், இதுவரை வீடு திரும்பவில்லை.
பெற்றோர் பல இடங்களில் தேடியும், மகள்கள் கிடைக்காததால், வித்யாரண்யபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் மாணவியரை கண்டுபிடிக்க, 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்தனர். இப்படையினர் டில்லி, சென்னை, காசி உட்பட, 100க்கும் மேற்பட்ட நகரங்களில் தேடியும், எந்த பயனும் இல்லை.
கா ணாமல் போன மாணவியர், மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டுகள் பயன்படுத்தவில்லை. தங்களின் பெற்றோரையோ, நண்பர்களையோ தொடர்பு கொள்ளவில்லை . இதனால் அவர்களை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
ஆரம்பத்தில், இரண்டு மாணவியரும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின், மலை மஹாதேஸ்வரா மலை வரை சென்றதற்கான தடயங்கள் கிடைத்தன. போலீசார் அங்கு செல்வதற்குள், அங்கிருந்து காணாமல் போயினர். அவர்களிடம் வெறும் 3,000 ரூபாய் மட்டுமே இருந்தது. கையில் பணம் இல்லாமல் எங்கு உள்ளனர் என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் செயல்பாட்டில் உள்ளதால், இவர்கள் ஆதார் கார்டு பயன்படுத்தி, பஸ்களில் பயணித்து வேறு வேறு ஊர்களுக்கு சென்றிருக்கலாம் என, போலீசார் சந் தேகிக்கின்றனர்.
போலீசார் பல இடங்களில் தேடியும், மாணவியரை கண்டுபிடிக்க முடியாததால், பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்றமும் மாணவியரை கண்டுபிடிக்க, காலக்கெடு விதித்தது. இந்த கெடு முடிந்து, ஒரு மாதம் கடந்தும், அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.
