கே.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு 2 கண்காணிப்பாளர்கள் நியமனம்! அதிகரித்துள்ள முறைகேடுகளை தடுக்க முயற்சி
கே.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு 2 கண்காணிப்பாளர்கள் நியமனம்! அதிகரித்துள்ள முறைகேடுகளை தடுக்க முயற்சி
ADDED : நவ 13, 2026 12:22 AM
பெங்களூரு: கே.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் அதிகரித்துள்ள முறைகேடுகளை தடுக்கும் முயற்சியாக, தேர்வு மையங்களில் இரண்டு கண்காணிப்பாளர்களை நியமிக்க அதிகாரிகளுக்கு, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் அரசு பணிக்கான தேர்வுகளை, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த ஆணையம் நடத்திய பல தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளன.
கடைசியாக கால்நடை மருத்துவர் அதிகாரிக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில், கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா, பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலே, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கே.பி.எஸ்.சி., அமைப்பை கலைத்து விட்டு, யு.பி.எஸ்.சி., முறையில் தேர்வு நடத்தலாமா என்று, அரசு ஆலோசித்து வருவதாக, அமைச்சர்கள் சிலரும் கூறினர்.
இந்நிலையில், கர்நாடக அரசின் குரூப் ஏ, பி பிரிவுகளில் காலியாக இருக்கும் 319 பணியிடங்களை நிரப்ப, கே.பி.எஸ்.சி., தேர்வு நடத்துகிறது. இந்த தேர்வுக்காக பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும், 345 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வை முறைகேடு இன்றி நடத்துவது தொடர்பாக, பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் கலெக்டர்கள், எஸ்.பி.,க்களுடன், முதல்வர் சிவகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதிகாரிகள் பொறுப்பு
அப்போது அவர் பேசியதாவது:
வரும் 15ம் தேதி குரூப் ஏ, பி பிரிவுகளில் காலியாக இருக்கும், 319 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வை வெளிப்படையாக, முறைகேடுகள் இல்லாத தேர்வாக நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தேர்தல் நேரத்தில் ஓட்டுப்பதிவின் போது என்ன மாதிரியான பாதுகாப்பு இருக்குமோ, அதை பாதுகாப்பை கொண்டு வர வேண்டும்.
தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். தேவையற்ற நபர்களை தேர்வு மைய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களை வாடகை அடிப்படையில் பெறலாம்.
தேர்வு மையத்திற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதிகாரிகள் தான் பொறுப்பேற்க நேரிடும். தேர்வு மையத்தில் இரண்டு கண்காணிப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இப்படி நியமிப்பது இது முதல் முறை.
தனியார் உதவி பெறும் கல்லுாரிகளின் தேர்வு மையங்களில், தேர்வு முறைகேடு கண்டறியப்பட்டால் அந்த கல்லுாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். தேர்வு குறித்து பொய் செய்திகள் பரவ அனுமதிக்க கூடாது.
சமூக ஊடகங்களை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வதந்திகள் எதையும் நம்பாமல், தேர்வர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்.
தேர்வு முடிந்து முடிவுகள் வெளியானதும் ஆள்சேர்ப்பு செயல்முறையில் தாமதம் ஏற்படுகிறது. இதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டருக்கு ஒரு நகல்
இந்த ஆலோசனையில் பங்கேற்ற கே.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டாளர் பிரசன்னா, தேர்வுக்கான தயாரிப்புகள் குறித்து முதல்வரிடம் விளக்கினார். அந்த தயாரிப்பில் சில சீர்திருத்தங்கள் உள்ளன.
வினாத்தாளில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் விடை அளிக்காமல் காலியாக விட கூடாது. ஐந்தாவது ஆப்ஷனை குறிப்பது கட்டாயம்
தேர்வர், கே.பி.எஸ்.சி., மதிப்பீடு குழு, கலெக்டர் ஆகியோருக்கு தலா ஒரு ஓ.எம்.ஆர்., தாள் நகல் வழங்கப்படும். இது வெளிப்படை தன்மையை உறுதி செய்யும்
அனைத்து ஓ.எம்.ஆர்., நகல்களும் தேர்வு முடிவு வெளியாகும் நாளன்றே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
1.47 லட்சம் பேர்
முதல் தேர்வு காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. இதில், பொது அறிவு மற்றும் மானுடவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தேர்வு மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை நடக்கிறது.
இதில் மாநிலம் சார்ந்த பொது அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மனத்திறன் தொடர்பான கேள்விகள் வரும். 100 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்கள். இந்த தேர்வை எழுத, 91,238 ஆண்கள், 53,074 பெண்கள் என ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 67 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
