/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் 20 லட்சம் சட்டவிரோத குடியேறிகள்; அரசு என்ன செய்கிறது என ஐகோர்ட் 'கிடுக்கிப்பிடி'
/
பெங்களூரில் 20 லட்சம் சட்டவிரோத குடியேறிகள்; அரசு என்ன செய்கிறது என ஐகோர்ட் 'கிடுக்கிப்பிடி'
பெங்களூரில் 20 லட்சம் சட்டவிரோத குடியேறிகள்; அரசு என்ன செய்கிறது என ஐகோர்ட் 'கிடுக்கிப்பிடி'
பெங்களூரில் 20 லட்சம் சட்டவிரோத குடியேறிகள்; அரசு என்ன செய்கிறது என ஐகோர்ட் 'கிடுக்கிப்பிடி'
ADDED : பிப் 05, 2026 06:44 AM
பெங்களூரு: 'பெங்களூரில் வசிக்கும் 20 லட்சம் சட்டவிரோத குடியேறிகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதை அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும்' என்று மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வசிப்பதாக, ஹிந்து அமைப்பை சேர்ந்த புனித் கெரேஹள்ளிக்கு தகவல் கிடைத்தது. தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்று விசாரித்தபோது, ஐந்து ஆண்டுகளாக கணவனும், மனைவியும் இங்கு வசித்து வருவதும், போலி ஆதார், ரேஷன் அட்டை பெற்றிருப்பதும் தெரியவந்தது.
தகவல் அறிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, அவர்களை போன்று பலர் இங்கு வசித்து வந்தது தெரியவந்தது. ஆனால், போலீசாரையும், ஹிந்து அமைப்பினரையும் பார்த்த அவர்கள், அன்றிரவே அந்த இடத்தை காலி செய்தது ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இதற்கிடையில், சட்ட விரோதமாக தங்கும் வங்கதேசத்தினருக்கு எதிராக பிரசாரம் செய்தது உட்பட புனித் கெரேஹள்ளி மீது சோழதேவனஹள்ளி போலீசார் இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், புனித் கெரேஹள்ளி மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி நாகபிரசன்னா: பெங்களூரில் தங்கும் வெளிநாட்டினர், எப்.ஆர்.ஆர்.ஓ., எனும் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனரா, இல்லையா என்பதை பார்க்க வேண்டியது அரசின் பணியாகும். இந்த பணியை அரசு செய்யவில்லை என்பதை புனித் கெரேஹள்ளி நிரூபித்துள்ளார். அவர் மீது நீங்கள் எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்.
வெளிநாட்டில் இருந்து வருவோர், பெங்களூரு முழுதும் தங்கி உள்ளனர். இவர்களில் யாரிடமும் விசாவோ அல்லது அனுமதியோ இல்லை. ஆனால் அரசு அவர்களை தங்க அனுமதித்து உள்ளது. இதை சுட்டிக்காட்டியதில் உங்களுக்கு பிரச்னையா?
அரசு கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர் ஜெகதீஷ்: சட்ட விரோதமாக தங்கி உள்ளனர் என்பதற்கான ஆவணங்களை புனித் காட்டட்டும். சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டுபிடிக்க வழிமுறைகள் உள்ளன. புனித் நேரடியாக செல்லக்கூடாது. சட்ட விரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை நாடு கடத்த, எப்.ஆர்.ஆர்.ஓ. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். வங்கதேசத்தினர் குறித்து அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீதிபதி: சட்டவிரோத குடியேறிகளை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் பணி. வங்தேசத்தினர் குடியேறி உள்ளனர் என்பதை புனித் சுட்டிக்காட்டி உள்ளாரே தவிர, 'ரெய்டு' நடத்தவல்லை. இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினர் மீது அரசு நடவடிக்கை எடுத்து உள்ளதா. அப்படி என்றால் எத்தகைய நடவடிக்கை எடுத்து உள்ளது. சட்ட விரோதமாக தங்கியவர்கள் எப்போது நாடு கடத்தப்படுவர்? இது தொடர்பாக எப்.ஆர்.ஆர்.ஓ.,க்கு சம்மன் அனுப்பப்படும்.
பெங்களூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 20 லட்சம் பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்ற அறிக்கையை அரசு சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளையில், புனித் கெரேஹள்ளி மீது தொடரப்பட்ட ஒரு வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு வழக்கில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது.
இவ்வாறு கூறி, விசாரணையை ஒத்திவைத்தார்.

