ADDED : அக் 07, 2025 05:01 AM

பெங்களூரு: 'ஐ லவ் முகமது' முழக்கம் தொடர்பான இரண்டு வழக்குகளில், 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பெங்களூரில் அளித்த பேட்டி:
'ஐ லவ் முகமது' எனும் முழக்கம் முதலில் உத்தர பிரதேசத்தில் எழுந்தது. பின் மற்ற மாநிலங்களிலும் பரவியது. கர்நாடகாவிலும் சில இடங்களில் இது ஒலித்தது. இதை போலீசார் தீவிரமாக செயல்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஐ லவ் முகமது முழக்கத்தால் பெலகாவி, தாவணகெரேவில் மோதல் ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதுவரை மொத்தம் இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. தாவணகெரேவில் 11 பேரும்; பெலகாவியில் 10 பேரையும் கைது செய்து உள்ளோம்.
சில பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஐ லவ் முகமது கொடிகள், பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. அனைத்து சமூகத்திலும் 99 சதவீத மக்கள் அமைதியையே விரும்புகின்றனர். மீதமிருக்கும் 1 சதவீதத்தினர் மட்டுமே வன்முறையை துாண்டும் விதமாக செயல்படுகின்றனர்.
தீபாவளி பண்டிகை வர உள்ளது. எனவே, வகுப்புவாத கலவரங்கள் வெடிக்கக்கூடிய இடங்களில் போலீசார் அதிக எண்ணிக்கையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.