/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் 22,000 சைபர் வழக்குகள்
/
கர்நாடகாவில் 22,000 சைபர் வழக்குகள்
ADDED : பிப் 18, 2025 05:47 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஆண்டு மட்டும் 22,445 சைபர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பல பகுதிகளில் நாளுக்கு நாள் சைபர் மோசடி வழக்குகள் நடந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அதிக எண்ணிக்கையில் சைபர் மோசடிகள் நடக்கின்றன. நன்கு தொழில்நுட்பம் தெரிந்த இளம் தலைமுறையினரும் சிக்குகின்றனர்.
சைபர் கொள்ளையர்கள் டிஜிட்டல் கைது, பம்பர் பரிசு என புதுப்புது வழிகளை கண்டுபிடித்து பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இதில் இருந்து தப்பிக்க சைபர் போலீசார், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், இன்னும் மோசடிகள் தொடர்கின்றன.
தற்போது, இந்திய அளவில் கடந்த ஆண்டில் பதிவான சைபர் வழக்குகளின் பட்டியலை என்.சி.ஆர்.பி., எனும் தேசிய சைபர் குற்றப்பிரிவு, இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் 7,79,435 சைபர் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், கர்நாடகாவில் மட்டும் 22,445 சைபர் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில், 298 கோடி ரூபாய் அளவில் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக வழக்குகளில் 8,677 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 643 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு சைபர் திருடர்களை பிடிப்பது பெரும் சவாலாக உள்ளது.
சைபர் திருடர்கள் நம்நாட்டில் மட்டுமின்றி துபாய், கம்போடியா, சீனா, தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து செயல்படுகின்றனர்.
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், சைபர் கொள்ளையர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

