UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 06:44 PM

- நமது நிருபர் -: மங்களூரின் டெரலகட்டேயை சேர்ந்த நான்கு நண்பர்கள் ஆட்டோவில் 23 நாட்களில் 7,600 கி.மீ., பயணித்து காஷ்மீர் சென்று திரும்பி, தங்களின் ஆறு ஆண்டு கால கனவை நனவாக்கி உள்ளனர்.
தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு தாலுகாவின் டெரலகட்டேவை சேர்ந்தவர்கள் ஹசன், 27, சாதிக், 26, அப்ரிடி, 27, அசீம், 30. இவர்கள் அவ்வப்போது சிக்கமகளூரு, மைசூரு போன்ற இடங்களுக்கு ஆட்டோவிலேயே சென்று வந்தனர்.
நான்கு ஆண்டுக்கு முன்
இவ்வாறு செல்லும் போது காஷ்மீர், லடாக்கிற்கு ஆட்டோவில் செல்ல வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டனர்.
ஹசன் ஆட்டோ ஓட்டுநராகவும், சாதிக் வைபை தொழில்நுட்ப வல்லுனராகவும், அப்ரிடி வெல்டராகவும், அசீம் கடை ஒன்றை துவக்கி கவனித்து வந்தனர். வாழ்க்கையின் பரபரப்பு, பிற வேலைகள் காரணமாக இத்திட்டம் தள்ளி கொண்டே போனது.
ஆனாலும் காஷ்மீர் செல்ல வேண்டும் என்ற கனவுக்காக இரண்டு முறை புதிதாக ஆட்டோவை வாங்கி புறப்படுவதற்கு முன், அதனை விற்றுவிட்டனர். கடைசியில் ஒரு நாள் சாதிக், தன்னிடம் இருந்த ஆட்டோ ஒன்றை ஆயத்தப்படுத்த துவங்கினார்.
ஒரு நாள் முடிவெடுத்து மற்ற மூன்று பேரிடமும் பேசி, கிராமத்தில் யாரிடமும் சொல்லாமல், நான்கு பேரும் அக்., 10 ம் தேதி ஆட்டோவில் காஷ்மீர், லாடக்கிற்கு புறப்பட்டனர்.
தங்கள் பயணம் குறித்து ஹசன் கூறியதாவது:
நானும், என் நண்பர்கள் மூன்று பேரும் திட்டமிட்டோம். அக்., 10ம் தேதி கிராமத்தில் யாரிடமும் சொல்லாமல், நான்கு பேரும் ஆட்டோவில் புறப்பட்டோம். காஷ்மீர் சென்று வர ஒரு மாதமாகும் என்று நினைத்தோம். ஆனால், 23 நாட்களில் எங்கள் பயணம் நிறைவு பெற்றது. ஆட்டோவில் லடாக் செல்வதே எங்கள் நோக்கம்.
ரூ.1.5 லட்சம் செலவு
எங்கள் நான்கு பேருக்கும் ஆட்டோ ஓட்ட தெரியும். ஒரு நாளைக்கு 400 கி.மீ., பயணிப்போம். ஒருவர் சோர்வடைந்தால், மற்றொருவர் ஓட்டுவார். காஷ்மீர் சென்று வர எங்கள் நான்கு பேருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவானது.
மத்திய பிரதேசம் வரை எல்.பி.ஜி., சிலிண்டர் கிடைத்தது. அதன் பின், நாங்கள் பெட்ரோல் பயன்படுத்தி பயணித்தோம். கர்நாடகாவில் இருந்து காஷ்மீர் சென்று வர மொத்தம் 7,600 கி.மீட்டரானது.
இங்கிருந்து மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத், ஆக்ரா, தாஜ்மஹால், டில்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் அடைந்தோம். காஷ்மீரில் ஐந்து நாட்கள் தங்கி, பஹல்காம், குல்மார்க், சோன்மார்க் ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, கார்கில் வழியாக லே - லடாக் அடைந்தோம்.
லடாக்கில் இருந்து மணாலி பயணிக்கும் போது, 300 கி.மீ., பெட்ரோல் நிலையமே இல்லை என்று லேயில் இருந்த ஒருவர் கூறினார்.
இதனால், 10 மற்றும் 18 லிட்டர் கேன்களில் பெட்ரோல் நிரப்பி கொண்டு, அதிகாலை 4:30 மணிக்கு லேயில் இருந்து புறப்பட்டோம். 17,500 அடி உயரமுள்ள டாங்லாங் லா கணவாயில் ஏறினோம். அங்கு வெப்பநிலை 14 முதல் 16 டிகிரி செல்ஷியஸ் இருந்தது.
கியர் ஜாம் ஆனதால், குளிரில் ஆட்டோ நின்றுவிட்டது. கியரை மாற்ற முடியவில்லை. எங்களிடம் இருந்த குடிநீரும் தீர்ந்து விட்டதால், எங்களுக்கு மூச்சு திணறலும், தலைசுற்றலும் ஏற்பட துவங்கியது.
அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுநர், 'ஆட்டோவை இங்கேயே நிறுத்திவிட்டு, கீழே வாருங்கள். இங்கு நிறுத்துவது பாதுகாப்பானது அல்ல' என்றார்.
நாங்கள் செல்லமாட்டோம் என்று கூறியபோது, அவர்களிடம் இருந்த ஆக்சிஜன் மாத்திரைகள், தண்ணீர் கொடுத்து உதவினர். 20 மீட்டர் துாரம் ஆட்டோவை தள்ளியதால் சோர்வடைந்தோம். பின் கியரை சரி செய்து, டிரக் ஒன்றின் உதவியுடன் ஹோம்ஸ்டேவுக்கு சென்றோம்.
மறுநாள் காலையில் பார்த்தபோது தண்ணீர் உறைந்திருந்தது. மீண்டும் கியரை சரி செய்ய எங்களுக்கு ஒன்றரை மணி நேரமானது. மோசமான அனுபவமாக இருந்தாலும், இத்தகைய அனுபவம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்களின் சாகச பயணத்தை கேட்ட போலீசார், எங்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். எங்களின் ஆறு ஆண்டு கனவு நிறைவேறியது.
இவ்வாறு அவர் கூறினார்.
