UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 06:44 PM

- நமது நிருபர் -: நல்ல உடல்வாகு கொண்ட மனிதர்களை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். இதே எண்ணத்தில் சாதித்தவர்கள் பலர் உள்ளனர். இவர்களில் ஒருவர் மகேந்திரா, 27.
மைசூரின் நஞ்சன்கூடு தாலுகா கப்பசோகே கிராமத்தை சேர்ந்தவர். வலது காலை இழந்த இவர், விவசாயத்தில் ராஜாவாக வலம் வருகிறார்.
மகேந்திரா கூறியதாவது:
எனது பெற்றோர் விவசாயிகள். சிறு வயதில் இருந்தே எனக்கு விவசாயம் மீது ஆர்வம் இருந்தது. கல்லுாரியில் படித்த போது எனது 17 வயதில் வலது கால் தசைகளில் புற்றுநோய் கட்டிகள் ஏற்பட்டு ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எனது காலை இழக்க நேரிட்டது. கொஞ்ச நாட்கள் வருத்தமாக இருந்தது. ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை.
தாயின் நகை
பெட்டி கடை வைத்து பிழைப்பு நடத்தி கொள்; லிப்ட் ஆப்பரேட்டராக வேலை வாங்கி தருகிறோம் என்று உறவினர்கள் கூறினர்.
ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு கால் இல்லாததை குறையாக நான் நினைக்கவில்லை. விவசாயத்தில் ஈடுபட நினைத்தேன்.
எனது 21 வயதில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். தாயின் நகையை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தில் நிறைய காய்கறி கள் பயிரிட்டேன்.
கொரோனா ஊரடங்கால் காய்கறிகளை விற்க முடியாமல் போனது. உருளை கிழங்கு மட்டும் அதிகம் விற்பனை ஆகி கைகொடுத்தது.
நல்ல லாபம்
கொரோனாவுக்கு பின், காய்கறிகள் விளைச்சல் மூலம் நன்கு லாபம் கிடைத்தது. எனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கிறேன். வாழை மரங்களை அதிகம் வளர்க்கிறேன்.
வாழை இலைகள், வாழைக்காய்கள் விற்பனை மூலம் நல்ல லாபம் கிடைக்கிறது. சுத்துார் மடம் சார்பில் நடத்தப்படும் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று நிறைய கற்று கொள்கிறேன்.
நான் கற்று கொள்வதை மற்ற விவசாயிகள், மாணவர்களுக்கும் சொல்லி கொடுக்கிறேன். தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து, மூன்று சக்கர வாகனத்தில் நிலத்திற்கு சென்று விடுவேன். ஊன்றுகோல்கள் தான் எனது நண்பர்கள்.
யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பது இல்லை. தேனீக்களில் வளர்ப்பிலும் ஈடுபடுகிறேன். தேன் பாட்டில்களை விற்பதன் மூலமும் லாபம் கிடைக்கிறது. விவசாயம் என்னை பொறுப்பான மனிதனாகவும், தன்னிறைவு வாழ்க்கை வாழும் நபராகவும் மாற்றி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
