24 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுதலை
24 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுதலை
ADDED : ஜூலை 05, 2026 02:19 AM
பெங்களூரு: கவர்னரின் உத்தரவுப்படி, நன்னடத்தை காரணமாக, சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 24 கைதிகள், நேற்று முறைப்படி விடுவிக்கப்பட்டனர்.
உணர்ச்சிவசப்பட்டு எடுத்த தவறான முடிவால் நடந்த குற்ற சம்பவங்களால், பலர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு சிறைக்கு செல்வோர், தாங்கள் செய்த தவறை உணர்ந்து, சிறைகளில் அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர்.
இத்தகையவர்களை மீண்டும் சமூகத்துடன் சேர வாய்ப்பு அளிக்கும் வகையில், கவர்னரின் உத்தரவின் படி, நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்படுகின்றனர். இதுபோன்று கடந்த மார்ச்சில், மாநிலம் முழுதும் சில கைதிகள் விடுக்கப்பட்டனர்.
அதுபோன்று, சிறைத்துறையின் பரிந்துரையின்படி, 24 கைதிகளை விடுவிக்க கவர்னர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து நேற்று விடுதலையாவோருக்காக சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பங்கேற்று, விடுதலையாகும் கைதிகளுக்கு விடுதலைக்கான சான்றிதழ் வழங்கினார். கூடுதல் டி.ஜி.பி., அலோக் குமார் பங்கேற்றார்.
அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், ''ஒவ்வொரு மனிதரிடம் ஒரு நல்ல குணம் இருக்கிறது. அவர்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். இந்த கைதிகள் சிறை விதிகளை தீவிரமாக பின்பற்றி, நல்லொழுக்கத்தை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அவர்களின் மனமாற்றமே, அவர்கள் விடுதலைக்கான காரணம்,'' என்றார்.
சிறையில் இருந்து வெளியே வந்த கைதி ஒருவர், தன் குடும்பத்தினரை கண்டதும் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
உணர்ச்சிவசப்பட்ட அவர் கூறுகையில், 'என் வாழ்க்கையின் இருண்ட தருணங்களில், சிறையில் பெற்ற பயிற்சி சரியான பாதையை எனக்கு காட்டியது. இந்த வாய்ப்பை வழங்கிய கவர்னருக்கும், சிறைத்துறைக்கும் நன்றி. நான் மீண்டும் சமூகத்தின் நல்ல குடிமகனாக வாழ முயற்சிப்பேன்' என்றார்.
