ADDED : ஜூன் 24, 2026 12:02 AM
பாகல்கோட்: மூதாட்டியின் மீது பந்து விழுந்ததால், கோபம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், இரு சிறுவர்களை பள்ளி ஜன்னலில் கட்டி வைத்து தாக்கியதாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பாகல்கோட் மாவட்டம் பாதாமி தாலுகாவின் நரேனுார் தாண்டாவை சேர்ந்தவர்கள் பிரஜ்வல், 14, சுஷாந்த், 14, தாங்கள் படிக்கும் பள்ளியில், கடந்த 21ம் தேதி கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது இவர்கள் விளையாடிய பந்து, சாலையில் நடந்து சென்ற பெண் மீது விழுந்தது. பெண்ணுடன் வந்த மூவர், கோபமடைந்து இரு சிறுவர்களையும் பிடித்து, பள்ளிக்கூட ஜன்னலில் கட்டி போட்டனர்.
அத்துடன், காலணி, கைகளால் சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்த சிறுவர்களின் பெற்றோர், படுகாயம் அடைந்த சிறுவர்களை, மருத்துவமனையில் சேர்த்தனர்.
தங்கள் மகன்களை தாக்கியவர்கள் மீது கெரூர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், ரேணுகா கோபால் லமானி, பசவராஜ் கோபால் லமானி, அபி சிவப்பா லமானி ஆகியோரை கைது செய்தனர்.
