மைசூரில் செங்கல் சூளையில் செங்கற்கள் சரிந்து 3 பேர் பலி
மைசூரில் செங்கல் சூளையில் செங்கற்கள் சரிந்து 3 பேர் பலி
ADDED : ஆக 02, 2026 11:10 PM
மைசூரு: செங்கல் சூளையில் செங்கற்களை அகற்றும்போது, மேலே விழுந்ததில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவின் பூதள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேஷ், 22, நாகராஜு, 35, நாராயண், 40. கூலி தொழிலாளர்களான இவர்கள், எங்கு வேலைக்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வர்.
கடந்த 15 நாட்களுக்கு முன், இக்கிராமத்தின் சித்தராஜு என்பவரின் செங்கல் சூளையில் பணிக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் மாலை சூடான செங்கற்களை அகற்றி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக செங்கற்கள் ராஜேஷ், நாராயண் மீது விழுந்தன.
இதை பார்த்த நாகராஜு, அவர்களை காப்பாற்ற முயற்சித்த போது, அவர் மீதும் செங்கற்கள் விழுந்தன. இதை பார்த்த மற்ற தொழிலாளர்கள், முதலில் நாகராஜுவை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
ராஜேஷ், நாராயண் ஆகியோரை மீட்பதற்குள், செங்கற்களின் வெப்பத்தால், உடல்கள் வெந்து உயிரிழந்தனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
தகவல் அறிந்த டி.நரசிபுரா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
