/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 3 ஆண்டு சிறை!: பெங்களூரில் உள்ள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
/
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 3 ஆண்டு சிறை!: பெங்களூரில் உள்ள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 3 ஆண்டு சிறை!: பெங்களூரில் உள்ள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 3 ஆண்டு சிறை!: பெங்களூரில் உள்ள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
ADDED : பிப் 13, 2025 05:15 AM
பெங்களூரு: 'குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால், மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, பெங்களூரில் உள்ள நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
'குழந்தை தொழிலாளர்களை நியமிப்பது சட்டவிரோதம். 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களை பணிக்கு நியமிக்க கூடாது' என, மாநில அரசு பல முறை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூட, இதை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான கடைகள், கேரேஜ், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் சிறுவர்களை பணியில் அமர்த்துகின்றனர்.
குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்ய முன் வருவதால், சிறார்களை வேலைக்கு நியமித்துக் கொள்கின்றனர். குறிப்பாக வட மாநிலங்களை சேர்ந்த சிறார்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். சில இடங்களில் பெற்றோருக்கு முன் பணம் கொடுத்து, பிள்ளைகளை பணிக்கு அமர்த்தி கொள்வதும், ஆங்காங்கே நடக்கிறது. தொழிலாளர் நலத்துறையும் திடீர் சோதனை நடத்தி, சிறார்களை மீட்கின்றனர்.
பெங்களூரிலும் குழந்தை தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் நடைமுறையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளர்கள் திட்ட சொசைட்டியின் செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. குழந்தை தொழிலாளர்கள் நடைமுறையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் பசவராஜ் பேசியதாவது:
பெங்களூரு நகர் மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர்கள் நடைமுறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதிகாரிகள் ஆங்காங்கே திடீர் சோதனை நடத்த வேண்டும். தாலுகா அளவிலான டாஸ்க் போர்ஸ் கமிட்டிகள், சோதனை நடக்கும் இடங்கள் பற்றிய தகவலை ரகசியமாக வைத்திருந்து, திடீர் சோதனை நடத்த வேண்டும்.
தாசில்தார் தலைமையில் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி, குழந்தை தொழிலாளர்கள் நடைமுறையை கட்டுப்படுத்துங்கள். குழந்தை தொழிலாளர்களை நியமித்து வேலை வாங்கும் தொழில் நிறுவனங்களின் மீது, நடவடிக்கை எடுங்கள். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், அபராதம் வசூலிக்க வேண்டும்.
திடீர் சோதனை நடத்தும் போது, மீட்கப்படும் சிறார்களுக்கு மறு வாழ்வு ஏற்படுத்தி தர வேண்டும். உணவு, தங்கும் இடம் உட்பட, அடிப்படை வசதிகளை செய்து, கல்வி அளித்து அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு வழி வகுக்க வேண்டும்.
குழந்தை தொழிலாளர்களிடம் வேலை வாங்குவது, தண்டனைக்குரிய குற்றமாகும். 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களை பணிக்கு நியமிப்பது, 18 வயதுக்கு உட்பட்டோரை, அபாயமான பணிகளில் ஈடுபடுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும்.
இத்தகைய குற்றத்தை செய்வோருக்கு, குறைந்தபட்சம் ஆறு மாதம், அதிகபட்சம் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். சிறை தண்டனை, அபராதம் என, இரண்டையும் சேர்த்தும் விதிக்கலாம்.
அதே தவறை மீண்டும் செய்தால், ஓராண்டு முதல் மூன்றாண்டு வரை, சிறை தண்டனை விதிக்கவும், சட்டத்தில் இடம் உள்ளது. குழந்தை தொழிலாளர்கள் குறித்து, கடைகள், கேரேஜ்கள், பேக்கரிகள், சிக்கன், மட்டன் கடைகள், வெவ்வேறு வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொது மக்களுக்கும், பள்ளி, கல்லுாரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சுவர்களில் எழுதுவது, வீதி நாடகங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆட்டோ மூலமாக பிரசாரம் செய்ய வேண்டும்.
பொது மக்களும் தங்கள் சுற்றுப்பகுதிகளில், யாராவது குழந்தை தொழிலாளர்களை நியமித்திருந்தால், உடனடியாக குழந்தைகள் சஹாய வாணி 1098ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஹர்ஷ வர்தன் பேசியதாவது:
பெங்களூரு நகர் மாவட்டத்தில், திடீர் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படுகின்றனர். 2023 - 24ம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தி, 14 வயதுக்கு உட்பட்ட 13 குழந்தை தொழிலாளர்கள், 18 வயதுக்கு உட்பட்ட 21 பேர் மீட்கப்பட்டனர்.
கடந்த 2024 - 25ல், 14 வயதுக்கு உட்பட்ட மூவர், 18 வயதுக்கு உட்பட்ட 33 பேர் மீட்கப்பட்டனர். 2024 முதல் இதுவரை, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.