/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'30 சதவீத சைபர் குற்றங்கள் பெங்களூரில் தான் பதிவு'
/
'30 சதவீத சைபர் குற்றங்கள் பெங்களூரில் தான் பதிவு'
'30 சதவீத சைபர் குற்றங்கள் பெங்களூரில் தான் பதிவு'
'30 சதவீத சைபர் குற்றங்கள் பெங்களூரில் தான் பதிவு'
ADDED : மார் 18, 2025 05:02 AM

பெங்களூரு: ''பெங்களூரில் 30 சதவீத 'சைபர் குற்றங்கள்' நடக்கின்றன,'' என, மேல்சபையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
மேல்சபையில் நேற்று பா.ஜ.,வின் சி.டி.ரவி, ரவிகுமார், ஹேமலதா நாயக், ம.ஜ.த.,வின் ம.ஜ.த., டி.ஏ.ஷ்ரவணா ஆகியோரின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
அமைதி
மாநிலத்தில் அமைதி, பாதுகாப்பு ஏற்படுத்தவே அரசு முக்கியத்துவம் அளிக்கும். சட்டத்தை கையில் எடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் மற்றொரு முகம் தான் போலீஸ் துறை. அதை சீர்கெடுக்க விடமாட்டோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹிந்து மதத்தினர் பண்டிகைகளின்போது 15 கலவரங்கள் நடந்துள்ளன. பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக, 44 வழக்குகள் பதிவாகி உள்ளன. மைசூரு உதயகிரி சம்பவம் தொடர்பாக, இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விஷயத்தில் போலீசாரின் அலட்சியம் குறித்து, துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், போலீசார் அலட்சியமாக இருந்தது தெரியவந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கொப்பால் மாவட்டம், கங்காவதியில் வெளிநாட்டு பெண் பலாத்காரம், ஒடிசா வாலிபர் கொலை வழக்கில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஹோம் ஸ்டேக்களில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் தொடர்பான விபரங்களை, ஆன்லைனில் 'சி பார்ம்' படிவம் பூர்த்தி செய்ய வேண்டும். அதில், வெளிநாட்டினருக்கு எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும்.
சுற்றுலா பயணியர் பாதுகாப்புக்காக, சுற்றுலா தலங்களில் இன்ஸ்பெக்டர் அந்துள்ள அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவர்.
30 சதவீதம்
குற்றச்சம்பவங்கள் குறைந்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
2022ல் 10,000 வழக்குகள் பதிவாகியிருந்தன. கடந்தாண்டு 22,000 வழக்காக அதிகரித்துள்ளன. குறிப்பாக, பெங்களூரில் தான் 30 சதவீதம் சைபர் கிரைம் குற்றங்கள் நடக்கின்றன.
சைபர் குற்றங்களை தடுக்க, நாட்டில் முதன் முறையாக மாநில டி.ஜி.பி., தலைமையில் 'சோஷியல் மீடியா விங்' துவங்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் தொடர்பாக, ஒவ்வொரு ஏட்டும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே, 40,000 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 'சோஷியல் மீடியா விங்' அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள், போலி செய்திகள், ஆத்திரமூட்டும் வீடியோக்களை கண்டுபிடித்து, மேற்கொண்டு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுப்பர்.
கொலை, கொள்ளை உட்பட சம்பவங்கள் குறைந்துள்ளன. சமூகத்திற்கு தொந்தரவு ஏற்படும் வகையில் செயல்படுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் 139 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.