தசராவுக்கு 3,000 கூடுதல் பஸ்கள்: கே.எஸ்.ஆர்.டி.சி., அறிவிப்பு
தசராவுக்கு 3,000 கூடுதல் பஸ்கள்: கே.எஸ்.ஆர்.டி.சி., அறிவிப்பு
UPDATED : அக் 11, 2026 12:00 AM
ADDED : அக் 10, 2026 09:24 PM

பெங்களூரு: தசரா பண்டிகைக்காக, பெங்களூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணியரின் வசதிக்காக, அக்டோபர் 16 முதல், 20ம் தேதி வரை பல்வேறு நகரங்களுக்கு, 3,000 கூடுதல் பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
தசரா பண்டிகை நேரத்தில், சொந்த ஊருக்கு செல்வோர், சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இவர்களின் வசதிக்காக பெங்களூரில் இருந்து, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களின் நகரங்களுக்கு, 3,000 கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். அக்டோபர் 16 முதல், 20ம் தேதி வரை, இந்த பஸ்கள் இயங்கும்.
பெங்களூரின் மெஜஸ்டிக், மைசூரு சாலை, சாந்திநகர் பஸ் நிலையங்களில் இருந்து, கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். கூடுதல் பஸ்கள் அக்டோபர் 20 மற்றும் 21ம் தேதிகளில், பல்வேறு இடங்களில் இருந்து, பெங்களூருக்கு திரும்பவுள்ளன.
தசராவை பார்க்க மைசூருக்கு செல்வோரின் வசதிக்காக, கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதலாக 700 பஸ்கள் இயக்கப்படும். இவற்றில் பெங்களூரில் இருந்து, மைசூரு நகருக்கு, 300 பஸ்களும், மைசூரின் சுற்றுப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலங்களுக்கு 400 பஸ்களும் இயங்கும்.
மைசூருக்கு தசராவை பார்க்க வருவோருக்காக, அக்டோபர் 15 முதல் 26ம் தேதி வரை, கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
கிரிதர்ஷினி திட்டத்தில், பண்டிப்பூர், கோபாலசாமி மலை உட்பட, பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும், ஜலதர்ஷினி திட்டத்தின் கீழ், கோல்டன் டெம்பிள், துபாரே வனப்பகுதி, ஹாரங்கி என, பல இடங்களுக்கும், தேவதர்ஷினி திட்டத்தின் கீழ், நஞ்சன்கூடு, முடுகுதொரே, தலக்காடு, சோமநாதபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா போன்ற இடங்களுக்கும் அழைத்து செல்லப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
