UPDATED : அக் 11, 2026 12:00 AM
ADDED : அக் 10, 2026 09:24 PM
பீதர்: முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தீவிர விசுவாசி ஒருவர், அன்னபாக்யா திட்டத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் ஆண் குழந்தைக்கு, அன்னராமையா என, பெயர் சூட்டியுள்ளார்.
பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுகாவின், துபலகுந்தி கிராமத்தில் வசிப்பவர் ராஜப்பா பூஜாரி. இவரது மனைவி அம்பிகா.
இந்த தம்பதி முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தீவிர விசுவாசிகள். இவர் செயல்படுத்திய, அன்னபாக்யா திட்டத்தின் பயனாளிகள்.
ஏழைகளின் பசியை போக்கும், நல்ல திட்டத்தை அளித்த சித்தராமையாவுக்கு, நன்றி கூறும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பது, தம்பதியின் எண்ணம்.
அம்பிகா நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால், பார்வதிராமையா என்றும், ஆண் குழந்தை பிறந்தால், அன்னராமையா எனவும் பெயர் சூட்ட முடிவு செய்திருந்தனர்.
சில நாட்களுக்கு முன், இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன் தினம் எளிமையாக பெயர் சூட்டு விழா நடத்திய தம்பதி, குழந்தைக்கு, அன்னராமையா என, பெயர் சூட்டியுள்ளனர்.
