/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரில் பிச்சை எடுத்த 33 குழந்தைகள் மீட்பு
/
மைசூரில் பிச்சை எடுத்த 33 குழந்தைகள் மீட்பு
ADDED : அக் 06, 2025 05:57 AM

மைசூரு : மைசூரு தசராவின் போது சாலைகள், சுற்றுலா தலங்களில் பிச்சை எடுத்து கொண்டிருந்த 33 குழந்தைகள், 'ஆப்பரேஷன் நவராத்திரி' மூலம் மீட்கப்பட்டு, அரசு மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மைசூரு தசராவை ஒட்டி, நகரில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தந்தனர். சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க வந்தவர்களை தொந்தரவு செய்யும் வகையில், பலர் குழந்தைகளுடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.
உணவு திருவிழா நடந்த மஹாராஜா கல்லுாரி மைதானம், தசரா கண்காட்சி மைதானம், அரண்மனை அருகில், மைசூரு மிருகக்காட்சி சாலை, சிக்னல்கள் உட்பட பல இடங்களில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர். சிலர் பொம்மைகளை விற்பனை செய்வது போன்று பிச்சை எடுத்தனர். இவர்களை கட்டுப்படுத்தும் வகையில், குழந்தைகள் உதவி எண் மற்றும் சிறப்பு சிறார் போலீஸ் பிரிவினர் 'ஆப்பரேஷன் நவராத்திரி' திட்டத்தை செயல்படுத்தினர்.
இதற்கான சிறப்பு படையினர் நடவடிக் கை எடுத்து 12 சிறுவர்கள், 21 சிறுமியர் என 33 குழந்தைகளை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள், குழந்தைகள் நல கமிட்டி முன் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேவேளையில், குழந்தைகளின் பெற்றோருக்கு, குழந்தைகள் நல கமிட்டி தலைவர் ரவிசந்திரன் மற்றும் உறுப்பினர்கள், அறிவுரை வழங்கி, மீண்டும் இத்தகைய செயலில் ஈடுபட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.